Published:Updated:

திருவாரூரில் சிக்கிய ஹவாலா பணம்! - அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்பா என விசாரணை

கைதான நபர் ஹவாலா பணத்தை குறிப்பிட்ட நபர்களிடமிருந்து மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய `குருவி’ என அழைக்கப்படும் சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டுவருவதும் தெரியவந்திருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரிடமிருந்து 17 லட்சம் ஹவாலா ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது யாருடைய பணம், முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு இதில் தொடர்பிருக்கிறதா எனத் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஹவாலா பணத்துடன் பிடிபட்டவர்
ஹவாலா பணத்துடன் பிடிபட்டவர்

திருவாரூர் மாவட்டம், குடவாசலுள்ள அத்திக்கடை என்ற பகுதியில் காவல்துறையினரின் சோதனைச்சாவடி இருக்கிறது. திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்பவர்கள் இந்தச் சாலை வழியாகச் செல்வது வழக்கம். நள்ளிரவில் இதன் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை, காவலர் மகேந்திரன் வழிமறித்து நிறுத்தியிருக்கிறார். அந்த நபரின் பேச்சு, முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், அவரது இரு சக்கர வாகனத்தை காவலர் மகேந்திரன் சோதனை செய்தபோது, 17 லட்சம் ரூபாய் பணம் அதில் இருந்திருக்கிறது. இந்தப் பணம் குறித்து உண்மையான தகவல்களை அந்த நபர் சொல்ல மறுத்ததால், குடவாசல் காவல் நிலையத்துக்கு காவலர் மகேந்திரன் உடனடியாக தகவல் தெரிவித்திருக்கிறார். அங்கு விரைந்து வந்த குடவாசல் காவல்துறையினர், அந்த நபரிடமிருந்து 17 லட்சம் ரூபாய் பணத்தையும், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அந்த நபர், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த நியாஸ்கான் என்பதும், ஹவாலா பணத்தை குறிப்பிட்ட நபர்களிடமிருந்து மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய `குருவி’ என அழைக்கப்படும் சட்டவிரோத வேலைகளில் அவர் ஈடுபட்டுவருவதும் தெரியவந்திருக்கிறது. அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இர்பான் என்பவர், ரியாஸ்கானிடம் இந்தப் பணத்தைக் கொடுத்து, வேறு சில நபர்களிடம் இதை ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறார். சில கோட் வேர்டு வார்த்தைகளையும் செல்போன் நம்பரையும் தன்னிடம் இர்பான் கொடுத்ததாகவும், அந்த நம்பரைத் தொடர்புகொண்டால் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து இந்தச் பணத்தை வாங்கிச் செல்வார்கள் எனத் தெரிவித்திருக்கிறார். இந்த நெட்வொர்கில் குருவியாகச் செயல்பட, தனக்கு முன்னரே கமிஷன் தொகையை வழங்கிவிடுவார்கள் என்றும் காவல்துறையினர் விசாரணையில் நியாஸ்கான் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஹவாலா பணம்
ஹவாலா பணம்

இது, ஹவாலா விவகாரம் என்பதால், வருமான வரித்துறையினருக்கு, குடவாசல் காவல் நிலையத்தினர் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, திருச்சி வருமான வரித்துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான டீம், குடவாசல் காவல் நிலையத்துக்கு வந்து நியாஸ்கானையும், ரூபாய் 17 லட்சம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்து திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நியாஸ்கானிடம் ஹவாலா பணத்தைக் கொடுத்த இர்பான் யார் என்பது குறித்தும், மேலும் ஹவாலா பணப் பரிமாற்ற நெட்வொர்க்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

கடந்த சில நாள்களாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழ்நாட்டில் சோதனை மேற்கொண்டுவருகிறார்கள். இன்னும் ஒரு சில நாள்களில் மத்திய மண்டல மாவட்டங்களிலுள்ள முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் சோதனை நடைபெறவிருப்பதாகத் தகவல் கசிந்திருக்கிறது. அது தொடர்பாக, ஹவாலா பண பரிமாற்றத்துக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையும் காவல்துறையும் விசாரணை நடத்திவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு