Published:Updated:

`எஃப்.ஐ.ஆரை ரத்து செய்கிறோம்; அதேநேரம்!' -மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

திருச்சி கல்லூரி மாணவர்கள் தாக்குதல்
திருச்சி கல்லூரி மாணவர்கள் தாக்குதல்

திருச்சி இளைஞர்களை நல்வழிப்படுத்த நீதிமன்றங்கள் வழங்கிய நூதனத் தண்டனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

திருச்சி கே.கே நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக வாகனத்தை ஓட்டியதாக வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த இளைஞர், போக்குவரத்துக் காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தை சீர்செய்ய உத்தரவிட்டது. அதையடுத்து, அவர் திருச்சி நீதிமன்றம் அருகே போலீஸாருடன் இணைந்து போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

இந்தச் சம்பவம் நடந்து ஒரு சில நாள்களே ஆன நிலையில், கடந்த ஜூலை மாதம் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதல் வழக்கிலும் இதேபோன்று வித்தியாசமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாலமுருகன்
பாலமுருகன்

கடந்த ஜூலை மாதம், கல்லூரி நுழைவாயில் அருகே மாணவர்கள் சிலர் உருட்டுக்கட்டை, கல் மற்றும் சோடா பாட்டில்களைக்கொண்டு தாக்கிக்கொண்டார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தாக்குதலில் 18 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தார்கள்.

தகவல் அறிந்த காவல்துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, காயமடைந்த மாணவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீஸார் விசாரணையில், கல்லூரியில் படிக்கும் சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்ததாகவும் சீனியர் மாணவர்கள் விளையாடிய இடத்தின் அருகே உள்ள பெஞ்சில் ஜூனியர் மாணவர்கள் அமர்ந்ததாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதமே மோதலாக மாறியதாகவும் தெரியவந்தது.

பாட்டில் வீச்சு... உருட்டுக் கட்டை தாக்குதல்! - திருச்சியில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்

இதுமட்டுமல்லாமல், மூன்றாமாண்டு மாணவர்கள் சிலர், சில மாணவிகளைக் கிண்டல் செய்ததாகவும், அதை இறுதியாண்டு மாணவர்கள் தட்டிக்கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதுவே தாக்குதலுக்கான காரணமாகவும் மாறியுள்ளதாம்.

திருச்சி கல்லூரி மாணவர்கள் தாக்குதல்
திருச்சி கல்லூரி மாணவர்கள் தாக்குதல்

இந்தத் தகராறில் ஈடுபட்ட 28 மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் சமரசம் செய்துகொண்டு வழக்கை வாபஸ் பெறப் போவதாக முடிவு செய்தனர். இது தொடர்பாக மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணை முடிவில் குற்றச்சாட்டுக்கு உள்ளான 28 மாணவர்களின் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தொடர்ந்து அவர், `இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 28 பேரும் திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பொதுப்பிரிவில் உள்ள வார்டில் வரும் பிப்ரவரி 22-ம் தேதி தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும்' என்றும், இதுதொடர்பாக மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வரிடம் கடிதம் பெற்று பிப்ரவரி 26-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் நீதிமன்றங்கள் வழங்கும் இதுமாதிரியான தீர்ப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு