Published:Updated:

``எந்தெந்த ஏ.டி.எம்-களில் `ஸ்கிம்மர்ஸ்'; அவனுக்குத்தான் தெரியும்"- பட்டதாரியின் தகவலால் போலீஸ் ஷாக்

சென்னையில் எந்தெந்த ஏ.டி.எம்-களில் ஸ்கிம்மர்ஸ், ரகசிய கேமராக்கள் பொருத்திய தகவல் அவனுக்கு மட்டும்தான் தெரியும் என போலீஸிடம் சிக்கிய போலி ஏ.டி.எம் கார்டு தயாரிக்கும் மன்னன் கூறிய தகவலால் விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இர்ஃபான்
இர்ஃபான்

சென்னை அயனாவரம், கான்ஸ்டபிள் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் உள்ளது. இந்த ஏ.டி.எம்-மை பராமரிக்கும் தனியார் நிறுவன ஊழியர் யுகராஜ், கடந்த 16.7.2019-ல் ஏ.டி.எம் இயந்திரத்தைப் பராமரித்தார். அப்போது அதில் கார்டுகள் உள்ளே விடும் இடத்தில் ஸ்கிம்மர்ஸ் கருவியும் இயந்திரத்தின் கீ போர்டு பகுதியில் ரகசிய கேமராவும் இருந்ததைக் கண்டுபிடித்தார். உடனடியாக அவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் ஸ்கிம்மர்ஸ் கருவி, ரகசிய கேமரா குறித்த தகவல்களைப் புகாராகக் கொடுத்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் வங்கி மோசடி தடுப்பு பிரிவின் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் செல்வராணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் துணை கமிஷனர் நாகஜோதியும் களமிறக்கப்பட்டார்.

Representational image
Representational image

ஏ.டி.எம்-மில் ஸ்கிம்மர்ஸ் கருவி, ரகசிய கேமராக்களைப் பொருத்தி வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களைத் திருடி போலி ஏ.டி.எம் கார்டுகளைத் தயாரித்து பண மோசடி செய்த வழக்கில் இர்ஃபான், அல்லா பக்கஷ், அப்துல் ஹாதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அல்லா பக்கஷ், அப்துல் ஹாதி ஆகியோர் போலி நிறுவனங்களை நடத்தி, வங்கிகளிடமிருந்து பி.ஓ.எஸ் இயந்திரங்களை வாங்கியதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். போலி ஏ.டி.எம் கார்டுகளைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் மூளையாக இருந்தது இர்ஃபான் என்பது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடமிருந்து ஸ்கிம்மர்ஸ், லேப் டாப், போலி ஏ.டி.எம் கார்டு, 63,600 ரூபாய், செல்போன், ஆடி கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர் போலீஸார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``ஏ.டி.எம்-மில் கார்டுகளை நுழைக்கும்போது ஸ்கிம்மர்ஸ் கருவிகள் உள்ளதா என்பதை மக்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். மேலும், இயந்திரத்தின் கீ போர்டுக்கு மேலே ரகசிய கேமரா உள்ளதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு பணத்தை எடுக்க வேண்டும். ஏ.டி.எம் இயந்திரத்தில் சந்தேகப்படும்படியாக எந்தப் பொருள்களும் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரகசிய நம்பர்களை மாற்ற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸார் வெளியிட்ட செய்தி குறிப்பு
போலீஸார் வெளியிட்ட செய்தி குறிப்பு

இந்த வழக்கில் கைதான இர்ஃபான் குறித்து போலீஸ் உயரதிகாரி நம்மிடம், ``பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார் இர்ஃபான். இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஜிம் பாடியான இவர், எல்லோரையும் மூளைச் சலவைச் செய்வதில் கில்லாடி. இவருக்கு ஏராளமான தோழிகள் உள்ளனர்.

மாதச் சம்பளத்தைக் கொண்டு தன்னுடைய தேவைகளை சமாளிக்க முடியாமல் இர்ஃபான் சிரமப்பட்டுவந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் போலி ஏ.டி.எம் கார்டுகளைத் தயாரித்து பணம் சம்பாதிக்கும் ஐடியா அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து ஆன் லைன் மூலம் ஸ்கிம்மர்ஸ் கருவிகள், ரகசிய கேமராக்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். சென்னையில் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம்-களை நோட்டமிட்ட இர்ஃபான், தன்னுடைய கூட்டாளிகள் மூலம் நள்ளிரவில் அதை ஏ.டி.எம் இயந்திரங்களில் பொருத்தியிருக்கிறார்.

Representational image
Representational image

பிறகு அதில் உள்ள தகவல்களைச் சேகரித்து போலி ஏ.டி.எம் கார்டுகளைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இவர் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் மோசடி செய்துள்ளார். இர்ஃபானிடம் சிக்கும் கார்டுகளில் பேலன்ஸ் தீரும் வரை பணத்தை எடுத்துக்கொண்டே இருப்பார். அதன்பிறகு அந்தக் கார்டுகளை தூக்கி எறிந்துவிடுவார்.

ஏ.டி.எம் கார்டுகளில் உள்ள ஸ்கிம்மர்ஸ், ரகசிய கேமராவில் உள்ள தகவல்களை எடுக்க தனி நெட்வோர்க்கை இர்ஃபான் வைத்திருந்துள்ளார். அவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் சில மணி நேரத்திலேயே போலி ஏ.டி.எம் கார்டு தயாராகிவிடும். கார்டு தயாரானதும் இரவு 11 மணிக்காக இர்ஃபான் மற்றும் அவரின் கூட்டாளிகள் காத்திருப்பார்கள். ஏனெனில் இரவு 11 மணி முதல் 12 மணி வரை அந்த நாளுக்குரிய வங்கி பணப்பரிவர்த்தனை கணக்கு முடிந்துவிடும். நள்ளிரவு 12 மணிக்கு மேல் அடுத்த நாளுக்குரிய கணக்கு தொடங்கும் என்பதால் அந்த நேரங்களில்தான் இந்த மோசடிக் கும்பல் கைவரிசை காட்டிவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்

மேலும், பணம் எடுக்கப்பட்ட விவரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வங்கிகளிலிருந்து நள்ளிரவில் மெசேஜ் வரும். அதைப்பார்த்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் இர்ஃபானின் கூட்டாளிகள் கருதிவந்துள்ளனர். இந்த வழக்கில் கைதான அல்லா பக்கஷ், அப்துல் ஹாதி ஆகியோர் வைத்திருக்கும் பி.ஓ.எஸ் இயந்திரத்தில் ஸ்வைப் செய்யப்படும் கார்டுகளிலிருந்து கிடைக்கும் பணத்தையும் உடனடியாக ஏ.டி.எம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அல்லா பக்கஷ், அப்துல் ஹாதி ஆகியோரின் வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக் கும்பல் நெட்வோர்க் குறித்து விசாரித்துவருகிறோம் "என்றார்.

`ஆடி கார்; துணை நடிகை; தினமும் ஒரு லட்சம்'- போலி ஏ.டி.எம். கார்டு மன்னனின் அதிர்ச்சி வாக்குமூலம்

போலி ஏ.டி.எம். கார்டுகளைத் தயாரிப்பதில் இர்ஃபான், மன்னன் என்றால் இந்த மோசடிகளுக்கு மூளையாக இன்னொருவர் இருக்கிறார். சென்னையில் எந்தெந்த ஏ.டி.எம்-களில் ஸ்கிம்மர்ஸ் கருவிகள், ரகசிய கேமராக்கள் பொருத்திய விவரம் அவருக்கு மட்டும்தான் தெரியும் என கைதானவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்தத் தகவலைக் கொண்டு சென்றுள்ளனர். இதனால்தான் போலீஸார் வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பில் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்துவோர்களுக்கு சில அறிவுரைகளை குறிப்பிட்டுள்ளனர்.

Representational image
Representational image

சென்னையில் எந்தெந்த ஏ.டி.எம்-களில் ஸ்கிம்மர்ஸ் கருவி, ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இர்ஃபானின் கூட்டாளி சிக்கிய பிறகே ஸ்கிம்மர்ஸ் கருவிகள், ரகசிய கேமராக்களை அகற்ற முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பவர்கள் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள் என்று போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.