Published:Updated:

`ரூ.25 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள்!' -நாகையில் கரை ஒதுங்கிய ஆப்கானிஸ்தான் ஹெராயின்

ஹெராயின்
ஹெராயின்

`கடத்தல் ஹெராயின், கடற்படையினர் கையில் சிக்காமல் இருக்க கடலில் வீசுகின்றனர். அவைதான் தற்போது கரை ஒதுங்குகின்றன'.

நாகை மாவட்ட கடற்கரை ஓரங்களில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பெட்டிகள் கரை ஒதுங்கியிருப்பது கண்டு சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஹெராயின்
ஹெராயின்

நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து, இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் அடிக்கடி கடத்தப்படுகின்றன. அவற்றைத் தடுக்க கடலோரக் காவல்துறை போலீஸார் கடற்கரை ஓரங்களில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 -ம் தேதி, வேளாங்கண்ணி அருகே செருதூர் கடற்கரையோரம் மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றைக் கடலோரக் காவல் குழும போலீஸார் கைப்பற்றித் திறந்து பார்த்தபோது, அதில் 15 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு, சுமார் ரூ.15 கோடியாகும். அவற்றை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த ஹெராயின் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்துவரும் நிலையில், நேற்று வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரன் இருப்பு வடக்கு சல்லிக்குளம் கடற்கரைப் பகுதியில், ஒரு மரப்பெட்டி கரை ஒதுங்கிக் கிடந்தது. இதுபற்றித் தகவல் அறிந்த கடலோரக் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெட்டியைக் கைப்பற்றித் திறந்து பார்த்தனர். அதில், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான ஹெராயின் இருப்பது கண்டு அதிர்ந்தனர். இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

ஹெராயின்
ஹெராயின்

இதுபற்றி மீனவர்களிடம் பேசினோம்.``கடந்த வாரம் ரூ.175 கோடி மதிப்பிலான 75 கிலோ ஹெராயின் மற்றும் 75 கிலோ ஐஸ் (மெதம்பிடமைன்) எனும் போதைப் பொருளோடு, கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட, 7 நபர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து எடுத்து வரப்பட்டுள்ள இந்த போதைப் பொருள், ஈரான் படகு மூலம் சர்வதேச கடல் பரப்புக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு வைத்து இரு இலங்கை மீனவப் படகுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இப்படி வரும் `கடத்தல் ஹெராயின், கடற்படையினர் கையில் சிக்காமல் இருக்க கடலில் வீசுகின்றனர். அவைதான் தற்போது கரை ஒதுங்குகின்றன'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு