Published:Updated:

திருச்சி: `போதை தெளிஞ்சா நம்மளைக் கொன்னுடுவான்!' - ரெளடி உடலைப் புதைத்துச் சென்ற நண்பர்கள்

ரௌடியைக் கொன்று புதைத்த நண்பர்கள்
ரௌடியைக் கொன்று புதைத்த நண்பர்கள்

உடலை, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் வீட்டுக்கு வந்து தூங்கியிருக்கிறார்கள்.

நண்பர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில் பிரபல ரெளடியைக் கொன்று, கொள்ளிடம் ஆற்றில் புதைத்திருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கொலையை மறைக்க, அவர்கள் நடத்திய நாடகத்தைக் கண்டு போலீஸாரே அதிர்ந்துவிட்டனர்.

திருச்சி
திருச்சி

ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் அருகேயுள்ள சங்கர் நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார். 2013-ல் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி. இவர் ரெளடிப் பட்டியலில் இருக்கிறார். இந்தநிலையில், கடந்த 7-ம் அன்று நண்பர்களுடன் வீட்டைவிட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லை என்று அவரின் தந்தை கணேசன் 25-ம் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த கோவில் பிள்ளை, சந்திரசேகர், சந்துரு, டாங்கிசங்கர், மணிமாறன் உள்ளிட்ட ஐந்து பேர் சிக்கியுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நவீன்குமாரைக் கொன்று, கொள்ளிடம் ஆற்றில் புதைத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பழனியப்பன் தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர்.

நவீன் புதைக்கப்பட்ட இடம்
நவீன் புதைக்கப்பட்ட இடம்

ஸ்ரீரங்கம் தாசில்தார் மகேந்திரன், துணை தாசில்தார் சுரேஷ், வி.ஏ.ஓ பத்மா ஆகியோர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் உடலைத் தோண்டி அங்கேயே மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் பழனியப்பனிடம் பேசினோம். ``நவீன்குமார் பெரிய ரெளடி. அவன்மேல் பல அடிதடி மற்றும் கொலை வழக்குகள் உள்ளன. அவரின் தந்தை கொடுத்த புகாரில், `ஐந்து பேர் என் மகனை அழைத்துச்சென்றார்கள். அதன் பிறகு அவன் வீட்டுக்கு வரவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன ஐந்து பேரையும் பிடித்து விசாரித்தோம். ஐந்து பேரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு எங்களுக்கே உண்டான பாணியில் விசாரிக்க, எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்கள்.

ரெளடி நவீன்
ரெளடி நவீன்

கோவில் பிள்ளை என்பவர் வீட்டு விஷேசம் சிறப்பாக முடிந்ததற்காக, கடந்த 8-ம் தேதி நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார். கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்தபோது, நவீன் அவரின் நண்பர் சந்திரசேகரிடம் ரூ.2,000 பணம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், `என்னிடம் பணம் இல்லை’ என்று சொல்ல, பதிலுக்கு நவீன் `பணம் இல்லாம குடிக்க எதுக்கு வந்தே’ என்று சந்திரசேகரை விளையாட்டுக்குத் தலையில் அடித்திருக்கிறான். கடுப்பான சந்திரசேகர், போதையில் நவீனைத் தள்ளிவிட்டதில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கியநிலையில் கிடந்திருக்கிறார்.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

``நாம வேற அடிச்சிட்டோம். அவனுக்கு போதை தெளிஞ்சா, நம்மளைக் கொன்னுடுவான். இவனை உயிரோட விடக் கூடாது” என்று நண்பர்களே சேர்ந்து பிளேடால் நவீனின் தொண்டையை அறுத்து கொன்றிருக்கிறார்கள். சந்தேகம் எதுவும் வராமலிருக்க, ரத்தம் சிந்திய இடத்தில் நவீனின் துணி மற்றும் இவர்கள் ஐந்து பேர்கள் அணிந்திருந்த துணியை அதே இடத்தில் கொளுத்தியிருக்கிறார்கள். பின்பு உடலை, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் வீட்டுக்கு வந்து தூங்கியிருக்கிறார்கள்.

அதோடு, அவர்கள் குடும்பத்தைத் தொடர்ந்து கண்காணித்திருக்கிறார்கள். போலீஸாருடைய நகர்வுகளையும் கண்காணித்திருக்கிறார்கள். இப்போதுதான் கைதுசெய்திருக்கிறோம். முழுமையாக விசாரித்துவிட்டுப் பேசுகிறோம்" என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு