Published:Updated:

ராமநாதபுரம்: `ஞானவேல் ராஜா ஆஜராக உத்தரவு!’ - வேகமெடுக்கும் ரூ. 3 கோடி மோசடி வழக்கு

ஞானவேல் ராஜா
ஞானவேல் ராஜா

ராமநாதபுரத்தில் நடந்த ரூ. 3 கோடி நிதி மோசடி தொடர்பான வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மூலக்கொத்தளம் பகுதியில் வசிப்பவர் துளசி மணிகண்டன். தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வரும் இவர், சிக்கல் அருகே உள்ள தத்தங்குடியில் பணியாற்றி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த் என்பவருடன் நண்பராகி உள்ளார். நாளடைவில் இருவரும் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகிய நிலையில் ஆசிரியர் ஆனந்த், தன் நண்பர் நீதிமணியுடன் இணைந்து சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் எனத் துளசி மணிகண்டனிடம் கூறியுள்ளார்.

ஆசிரியர் ஆனந்த்
ஆசிரியர் ஆனந்த்

இந்தத் தூண்டிலில் சிக்கிய துளசி மணிகண்டன் தன் மனைவி ஐஸ்வர்யா பெயரில் ரூ.12 லட்சத்தைக் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஆனந்த்தின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதுதவிர, தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் இங்கு முதலீடு செய்ய வைத்துள்ளார். துளசி மணிகண்டனை நம்பி அவரது உறவினர்கள் சுமார் 3 கோடி ரூபாய் வரையில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் சில மாதங்கள் அந்த முதலீட்டுக்கான வட்டித் தொகையை ஆசிரியர் ஆனந்த் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பணம் முதலீடு செய்தவர்களுக்கான லாபத் தொகை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து ஆசிரியர் ஆனந்த் மற்றும் நிதி நிறுவனத்தை நடத்திய நீதிமணியிடம் துளசி மணிகண்டன் உள்ளிட்டோர் தங்கள் பணம் குறித்துக் கேட்டுள்ளனர். ஆனால், இதற்கு முறையான பதில் சொல்லாத நீதிமணியும் ஆனந்தும் முதலீட்டாளர்களை மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகாரளித்தனர்.

நீதிமணி
நீதிமணி

இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார், நிதி நிறுவனம் நடத்தி வந்த நீதிமணி, அவர் மனைவி மேனகா, ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமணியையும் ஆசிரியர் ஆனந்த்தையும் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரிடம் பணத்தாசையைத் தூண்டி சுமார் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக போலீஸாரால் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், பிரபல திரைப்படத் தயாரிபாளர் ஞானவேல் ராஜா மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் உள்ளிட்டோருக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து ஞானவேல் ராஜாவை ஜூலை 24-ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராமநாதபுரம் போலீஸார் சம்மன் அனுப்பினர்.

`அரசு துணைச் செயலர்; வேலை வாங்கித் தருவதாக மோசடி!’ - போலீஸில் சிக்கிய போலி அரசு அதிகாரி

இந்நிலையில், விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு ஞானவேல் ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், கொரோனா தாக்கம் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் அல்லது காணொலிக்காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க கோரப்பட்டிருந்தது. இன்று நடந்த இந்த வழக்கு விசாரணையில், மோசடியில் தனக்கு தொடர்பு இல்லை. எஃப்.ஐ.ஆரிலும் தனது பெயரில்லை என ஞானராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதற்கு மறுப்பு தெரிவித்த போலீஸார், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலேயே ஞானவேல் ராஜாவுக்கு சம்மன் அனுப்பபட்டது எனவும், வழக்கில் முன்னேற்றத்துக்கு ஞானவேல் ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்துவது அவசியம் என வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளந்திரையன் ஆகஸ்ட் 7-ல் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், அவர் ஆஜராக தவறினால் காவல் துறையினர் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இதனால் 300 கோடி அளவிலான நிதி மோசடி வழக்கு விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு