Published:Updated:

தேனி: ஹோமியோபதி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை... அதிகாரியின் டார்ச்சர் காரணம் என மனைவி புகார்!

தேனி அருகே ஹோமியோபதி டாக்டர் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரிடம் தேனி மாவட்ட குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குநர் பணம் கேட்டு மிரட்டியதே தற்கொலைக்கு காரணம் என டாக்டரின் மனைவி புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(50). இவர் லட்சுமிபுரம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செல்வி எலக்ட்ரோ ஹோமியோபதி கிளினிக் நடத்தி வந்தார். இவர் ஹோமியோபதி மருத்துவம் செய்ய முறையான பதிவு பெற்று அப்பகுதியில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கொரோனா காலத்திலும் கூட ஹோமியோபதி மருத்துவம் மூலம் மக்களுக்கு மருத்துவம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தற்கொலை
தற்கொலை

இதற்கிடையே, ``கடந்த ஓராண்டுக்கு முன்பு தேனி மாவட்ட குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குநராக பணியாற்றி வரும் டாக்டர் லட்சுமணன், உரிய அனுமதி பெறாமல் மருத்துவம் பார்ப்பதாகக் கூறி சீனிவாசனிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றதாகவும், மாதம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் போலி மருத்துவர் என்று வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பேன் என்றும் மிரட்டினார். இதனால் மன உளைச்சலில் இருந்த எனது கணவர் சீனிவாசன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே எனது கணவரை தற்கொலைக்கு தூண்டிய இணை இயக்குநரை கைது செய்ய வேண்டும்” என சீனிவாசனின் மனைவி சாந்தி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஹோமியோபதி டாக்டரின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் ஹோமியோபதி டாக்டரின் தற்கொலைக்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தேனி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் லட்சுமணனை கைது செய்ய வேண்டும் என்றும் லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையறிந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார், டாக்டர் சீனிவாசனின் உறவினர்கள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்துபோகச் செய்தார்.

டாக்டர் சீனிவாசன்
டாக்டர் சீனிவாசன்

இருப்பினும் ஹோமியோபதி டாக்டர் சீனிவாசனின் உயிரிழப்புக்கு காரணமான இணை இயக்குநரை கைது செய்யாவிட்டால் பிரேதப் பரிசோதனைக்கு பின்பு உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபடப்போவதாக உறவினர்களும் கிராம மக்களும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ''தற்போது 174 பிரிவில் தான் வழக்கு பதிவு செய்துள்ளோம். சீனிவாசனின் மனைவி செல்வி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அவரின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் வழக்கு வேறுப்பிரிவுகளில் மாற்றப்பட்டு, சம்பந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்'' என்றனர்.

குற்றஞ்சாட்டப்படும் தேனி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் லட்சுமணனை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அவருடைய எண் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு