ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் மான்கொம்பு வைத்திருப்பதாக விருதுநகர் மாவட்ட வனப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் ஆர்.எஸ்.மங்கலம் ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையில் விருதுநகர் மற்றும் சிவகங்கை வனக்குழுவினர் ஆசிரியர் வீட்டில் சோதனையிடச் சென்றபோது எதிர்ப்பு தெரிவித்து சோதனை செய்யவிடாமல் தடுத்துள்ளனர். பின்னர் வி.ஏ.ஓ சிவக்குமாருக்குத் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, அவர் முன்னிலையில் வனத்துறையினர் வீட்டைச் சோதனை செய்தனர்.

அப்போது வீட்டின் மின்மோட்டார் அறையில் வெள்ளைச் சாக்குப்பையில் பதுக்கிவைத்திருந்த தலையுடன்கூடிய மான் கொம்பைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆசிரியர் பழனியிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, ``எங்கள் வீட்டு முன்னோர்கள் காட்டில் வேட்டையாடி கொண்டு வந்து வைத்துள்ளனர். எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து எங்கள் வீட்டில் இந்த மான் கொம்பு இருந்துவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மானின் தலை எப்போது வெட்டி எடுக்கப்பட்டது என்பதை அறிய பறிமுதல் செய்த மானின் தலையை ஆய்வுக்கு உட்படுத்தபடவிருப்பதாகவும், ஆய்வின் முடிவு அறிக்கையின்படி ஆசிரியர் பழனி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
