Published:Updated:

சென்னை: `நீ ஏன் என் மனைவிக்கு உதவி செய்கிறாய்?’ - துப்பாக்கியால் சுட்ட ஹோட்டல் அதிபர்

துப்பாக்கி
துப்பாக்கி

சென்னையில், மனைவிக்கு உதவி செய்த அவரின் அக்காள் மகனை ஹோட்டல் அதிபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம் ஷா (57). இவரின் மனைவி பரகத்துண்ணிஷா (47). இவர்கள் இருவரும் ராயபுரம் ரயில் நிலையம் அருகிலுள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் 4-வது தளத்தில் குடியிருந்துவருகின்றனர். சென்னை பாரிமுனை அங்கமுத்து தெருவில், சையது இப்ராஹிம் ஷா சொந்தமாக ஹோட்டல் நடத்திவருகிறார். இந்தத் தம்பதியினருக்கு 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்துவருகின்றனர். கடந்த ஓராண்டாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. அதனால் ஓரே வீட்டில் இருவரும் குடியிருந்தாலும் பேசாமல் இருந்துவந்திருக்கிறார்கள்.

சையது இப்ராஹிம் ஷா
சையது இப்ராஹிம் ஷா

பரகத்துண்ணிஷாவுக்கு அவரின் சகோதரி மகன் அன்சாருதீன் (27) உதவியாக இருந்துவந்தார். அது, சையது இப்ராஹிம் ஷாவுக்குப் பிடிக்கவில்லை. சம்பவத்தன்று அன்சாருதீனிடம் செல்போனில் பேசிய சையது இப்ராஹிம் ஷா ``நீ ஏன் என் மனைவிக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறாய்?” என்று கேட்டு சண்டைபோட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அன்சாருதீன், தன்னுடைய நண்பர்களுடன் சையது இப்ராஹிம் ஷா வீட்டுக்கு இரவில் சென்றார். அன்சாருதீனுடன் மணி என்பவர் மட்டும் 4-வது தளத்துக்குச் சென்றார். மற்றவர்கள் கீழ்த்தளத்தில் இருந்தனர். வீட்டுக்குச் சென்ற அன்சாருதீனையும் மணியையும் பரக்கதுண்ணிஷா வீட்டுக்குள் அனுமதித்திருக்கிறார்.

இதைப் பார்த்த சையது இப்ராஹிம் ஷா, பாத்ரூமுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். அன்சாருதீன், குளியலறைக் கதவைத் தட்டி, அவரை வெளியே வருமாறு கூறினார். அப்போது சையது இப்ராஹிம் ஷா, தான் மறைத்துவைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பாதி கதவைத் திறந்தநிலையில் அன்சாரூதீனை நோக்கிச் சுட்டார். அன்சாருதீனின் இடது உள்ளங்கையில் குண்டு துளைத்தது. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு பரக்கதுண்ணிஷாவும் மணியும் சத்தம் போட்டனர். பின்னர் அன்சாருதீனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில் சையது இப்ராஹிம் ஷாவின் இடது கையிலும் காயம் ஏற்பட்டது. அவரும் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பீகார் எல்லையில் நேபாளப் பாதுகாப்புப் படை `திடீர்’ துப்பாக்கிச் சூடு! - என்ன நடந்தது?
பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள்
பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள்

துப்பாக்கிச்சூடு தொடர்பாக ராயபுரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சையது இப்ராஹிம் ஷா வீட்டிலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, எட்டு குண்டுகள், இரண்டு வெடித்த தோட்டாக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

போலீஸாரின் விசாரணையில் சையத் இப்ராஹிம் ஷா வைத்திருந்த கைத்துப்பாக்கி லைசென்ஸ் பெற்றது எனத் தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர். முதற்கட்டமாக அன்சாருதீனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அன்சாருதீன், சையது இப்ராஹிம் ஷா ஆகியோரிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு