Published:Updated:

``சம்பளப்பாக்கி கேட்டதற்கு கட்டி வைத்து அடித்தார்கள்!” - அ.தி.மு.க பிரமுகரை குற்றம்சாட்டும் ஊழியர்

ஊழியர் முகமது யூசுப்
ஊழியர் முகமது யூசுப்

மலேசியாவுக்கு வேலை பார்க்கச் சென்ற தேவகோட்டையைச் சேர்ந்த ஊழியர் முகமது யூசுப், அவர் வேலை பார்த்த ஹோட்டல் நிர்வாகிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட காயங்களை பத்திரிகையாளர்களிடம் அவர் காண்பித்தார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவர் வேலைக்காக கடந்த 2018-ம் ஆண்டு ஏஜென்ட் உதவியுடன் மலேசியாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கார் கழுவும் வேலையை 7 மாதங்கள் செய்து வந்துள்ளார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் லெபாஅம்பாங் பகுதியில் உள்ள காரைக்குடி செட்டிநாடு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

இந்த ஹோட்டல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தேவகோட்டை, கண்டதேவி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் முருகன் என்பவருக்குச் சொந்தமானது. இவர் மலேசியாவில் கணேசன் என்பவரை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு இந்த ஹோட்டலை நடத்தி வந்திருக்கிறார்.

காயங்களுடன் யூசுப்
காயங்களுடன் யூசுப்

முருகனுக்குச் சொந்தமான ஹோட்டலில் பணியாற்றிவந்த முகமது யூசுப்பிற்கு மூன்றரை மாத சம்பளப் பாக்கி வைத்திருக்கின்றனர். இதைக் கேட்டபோது ஹோட்டல் உரிமையாளர்கள் எந்தப் பதிலும் தரவில்லை. இந்த நிலையில், ஹோட்டலில் இருந்து யூசுப் கிளம்ப முயன்றபோது கணேசன் மற்றும் மேலாளர் சேனாதிபதி ஆகியோரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், முகமது யூசுப் மற்றும் புலம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

`காயம் எதுவும் இல்லை!' - விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி #NowAtVikatan

அப்போது பேசிய முகமது யூசுப், ``மலேசியாவில் முதலில் செய்துவந்த கார் வேலை ஒத்துவரவில்லை என்பதால்தான் ஹோட்டல் வேலைக்குச் சேர்ந்தேன். அதிலும் உரிமையாளர் முருகன் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் நம்பிக்கையுடன் சேர்ந்தேன். ஆனால், சேர்ந்த பிறகுதான் அங்குள்ள பிரச்னை தெரிந்தது. அங்குள்ள மற்ற 10 ஊழியர்களுக்குமே நிர்வாகத்தினர் சம்பளப் பாக்கி வைத்திருந்திருக்கின்றனர்.

நான் பலமுறை கேட்டபோதும் ஹோட்டல் நிர்வாகிகள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. கடந்த 22-ம் தேதி நான் ஹோட்டலில் இருந்து கிளம்பியபோது முருகன் மற்றும் மேலாளர் சேனாதிபதி என்னைக் கட்டிவைத்து பைப் போன்றவற்றைக் கொண்டு பல மணி நேரம் அடித்தனர். இந்தச் செய்தி புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளிவரவே  மலேசிய காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

காயங்களுடன் யூசுப்
காயங்களுடன் யூசுப்

பிரச்னை பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக முருகனின் உத்தரவின் பேரில் கணேசன் என்னை சென்னைக்கு விமானத்தில் அனுப்பிவைத்தார். நான் திருச்சிக்கு அனுப்பிவைக்கச் சொல்லித்தான் கேட்டிருந்தேன். சென்னை வந்திறங்கியதும் சிபி என்பவர் விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் சென்று சாலிகிராமத்தில் உள்ள ஹோட்டலில் அடைத்து வைத்தார். காயங்கள் எல்லாம் சரியான பிறகுதான் அங்கிருந்து செல்ல முடியும். இல்லையென்றால் வெட்டிப் புதைத்துவிடுவேன் என்று மிரட்டினார்” என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய புலம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்குமார், ``சாலிகிராமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகமது யூசுப்பை விருகம்பாக்கம் காவல்துறையினர்தான் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக புகார் அளிக்க டி.ஜி.பி அலுவலகம் சென்றபோது சிவகங்கை ஐ.ஜி-யிடம் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.

சொந்த ஊருக்குச் சென்றால் இவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதனால் காவல்துறை இவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஹோட்டல் உரிமையாளர் முருகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

பொன்குமார்
பொன்குமார்

இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் முருகனைத் தொடர்பு கொண்டபோது அவருடைய இணைப்பைப் பெற முடியவில்லை. விளக்கம் தரும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின் அது பிரசுரிக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு