Published:Updated:

`திருடிய பணத்தில் மகளுக்குத் திருமணம்; மருமகனுக்கு கார்!' - டாக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த சகோதரிகள்

மீட்கப்பட்ட நகைகள்
மீட்கப்பட்ட நகைகள்

டாக்டர் வீட்டில் வேலைபார்த்த சென்னை சகோதரிகள், கடந்த 2 ஆண்டுகளாக நகை, தங்க பிஸ்கட், பணம் எனத் திருடியுள்ளனர். அதைக் கொண்டு மகளுக்குத் திருமணம், மருமகனுக்கு சொகுசு கார் என ஆடம்பரமாகச் செலவு செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர், காசாமேஜர் ரோடு, சுலைமான் சக்ரியா அவென்யூவில் உள்ள பங்களா வீட்டில் குடியிருப்பவர் டாக்டர் கோகுல்தாஸ். இவரின் மகன் கல்யாண் கோகுல்தாஸ். கோகுல்தாஸ் வீட்டில் வேலைபார்த்த சென்னை சேத்துப்பட்டு எம்.எஸ்.நகரைச் சேர்ந்த லோகநாயகி, அவரின் தங்கை ஷாலினி ஆகியோரை எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சேட்டு, எஸ்.ஐ ஐயப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

ஷாலினி
ஷாலினி

இதுகுறித்து நம்மிடம் பேசிய எழும்பூர் போலீஸார், `` தொழிலதிபர் கல்யாண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீட்டு வேலை செய்துவந்த லோகநாயகி, ஷாலினி ஆகியோரிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாகக் கொஞ்சம், கொஞ்சமாக நகை, பணம், தங்க பிஸ்கட்டுகளைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகள், 8 தங்க பிஸ்கட்கள், 3, 00,000 ரூபாய் மற்றும் சொகுசுக் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

கல்யாண்குமாரின் வீட்டிலிருந்து நகைகள், பணத்தை வீட்டு வேலை முடிந்து செல்லும்போது லோகநாயகியும் ஷாலினியும் சேலைக்குள் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர். தங்க நகைகளை விற்று வேறு நகைகளை வாங்கியுள்ளனர். ஆனால், தங்க பிஸ்கட்களை அப்படியே வைத்துள்ளனர். லோகநாயகியின் மகளுக்குத் திருமணம் நடந்துள்ளது. அந்தத் திருமணத்தை அவர் ஆடம்பரமாக நடத்தி அந்தப்பகுதி மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார். இதில், திருமணப் பரிசாக மருமகனுக்கு சொகுசுக் கார் ஒன்றை கொடுத்துள்ளார்.

லோகநாயகி
லோகநாயகி

மேலும் லோகநாயகியின் மருமகன் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்துவந்துள்ளார். தற்போது அவர், அந்த வேலையை விட்டுவிட்டு ஃபைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். ஷாலினி, திருடிய பணத்தில் தன்னுடைய மகளின் பூப்புனித நீராட்டு விழாவை சிறப்பாக நடத்தியுள்ளார். இதைத்தவிர லோகநாயகியுடன் பிறந்த சகோதரிகள் 6 பேருக்கும் திருடிய நகை, பணத்தைக் கொடுத்துள்ளார் லோகநாயகி.

லோகநாயகியும் ஷாலினியும் வேலை பார்த்த வீட்டில் அளவுக்கு அதிகமாக பணம், நகைகளை இருப்பதை நீண்ட காலமாக நோட்டமிட்டு வந்துள்ளனர். மேலும், டாக்டர் கோகுல்தாஸ், அவரின் மனைவி ஆகியோர் சீனியர் சிட்டிசன்ஸ். அவர்களை லோகநாயகியும் ஷாலினியும் அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக் கொண்டனர். அதனால் கல்யாண்குமார் குடும்பத்தினர் இருவரையும் முழுமையாக நம்பியுள்ளனர்.

டாக்டர் கோகுல்தாஸ் வீட்டில் பணம், நகைகளை வைக்கும் இடம் இவர்கள் இருவருக்கு நன்றாக தெரியும். நகை, பணம் வைத்திருக்கும் லாக்கரின் சாவியைத் திருடிய சகோதரிகள் முதலில் அதற்கு மாற்றுசாவிகளை வாங்கியுள்ளனர்.

எழும்பூர் காவல் நிலையம்
எழும்பூர் காவல் நிலையம்

பின்னர், டாக்டர் கோகுல்தாஸுக்கும் அவரின் மனைவிக்கும் உணவில் தூக்க மாத்திரைகளை அவ்வப்போது கலந்து கொடுத்துத் தூங்க வைத்துள்ளனர். வீட்டில் மற்ற பணியாளர்கள் யாரும் இல்லாத நேரங்களில் கள்ளச்சாவிகளைப் பயன்படுத்தி நகைகள், பணம் ஆகியவற்றை திருடியுள்ளனர். இதற்காக லோகநாயகியும் ஷாலினியும் ரகசிய சைகைகளை பயன்படுத்திவந்துள்ளனர்.

டாக்டர் கோகுல்தாஸ் வீட்டில் வேலைபார்க்கும் மற்ற பணியாளர்கள் வெளியில் செல்வதை அக்கா, தங்கை என இருவரில் யாராவது கவனித்துவிட்டால் தங்களின் ரகசிய சைகைகள் மூலம் ஒருவருக்கொருவர் அதைப் பகிர்ந்து கொள்வார்கள்.

உடனடியாக தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி கோகுல்தாஸ், அவரின் மனைவிக்கு கொடுத்துவிடுவார்கள். பின்னர் ஒருவர் கண்காணிக்க இன்னொருவர் நகை, பணத்தைத் திருடுவார். அப்போது முழு நகைகள், பணத்தை திருடமாட்டார்கள். ஏனெனில் லாக்கரிலிருக்கும் அனைத்து நகைகள், பணத்தை திருடினால் சிக்கிக்கொள்வோம் என்றுதான் கொஞ்சம் கொஞ்சமாக கைவரிசையைக் காட்டியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இவர்கள் கிலோ கணக்கில் தங்க நகைகள், தங்க பிஸ்கட்களை திருடியுள்ளனர். மேலும், பல லட்சத்தைத் திருடி அதை மற்றவர்களுக்கு வட்டிக்கும் கொடுத்துள்ளனர்.

representational image
representational image

கோகுல்தாஸ் வீட்டிலிருந்து வைர நகைகள் திருடப்பட்டுள்ளன. அதை நாங்கள் இருவரும் திருடவில்லை என்று லோகநாயகியும் ஷாலினியும் கூறிவிட்டனர். அதனால் அந்த வைர நகைகளைத் திருடியது இன்னொரு பணியாளர் என்ற தகவல் கிடைத்துள்ளது. வைர நகைகள் குறித்து அவரிடம் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

லோகநாயகியும் ஷாலினியும் இன்னொரு அதிர்ச்சி தகவலை போலீஸாரிடம் கூறியுள்ளனர். `நாங்கள் இருவர் மட்டும் திருடர்கள் அல்லர். எங்களைப்போல அந்த வீட்டில் வேலை பார்த்தவர்களும் தங்கள் பங்குக்குத் திருடினார்கள். அவர்களிடமும் விசாரியுங்கள்' என்று கூறியுள்ளனர்.

அதனால் டாக்டர் கோகுல்தாஸ் வீட்டில் வேலைபார்த்த அனைவரின் மீதும் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது" என்கின்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு