Published:Updated:

`ஒரு லட்ச ரூபாய்க்கு, மாதம் 30,000 ரூபாய்!' - `ஆருத்ரா'வின் புதிய திட்டம்; உஷார் மக்களே உஷார்

கவர்ச்சிகரமான திட்டங்களைக் கூறி பொதுமக்களிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு அனுமதியே கிடையாது. அப்படி நிதி திரட்டுவது என்றால், பாண்ட் உள்ளிட்ட வகைகளில்தான் செய்ய வேண்டும்.

`ஒரு லட்ச ரூபாய்க்கு, மாதம் 30,000 ரூபாய்!' - `ஆருத்ரா'வின் புதிய திட்டம்; உஷார் மக்களே உஷார்

கவர்ச்சிகரமான திட்டங்களைக் கூறி பொதுமக்களிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு அனுமதியே கிடையாது. அப்படி நிதி திரட்டுவது என்றால், பாண்ட் உள்ளிட்ட வகைகளில்தான் செய்ய வேண்டும்.

Published:Updated:
``எங்களிடம் ஒரு லட்சம் டொபசிட் செய்தால், மாதம் 10,000 கொடுப்போம்'', ``எங்களிடம் ஒரு லட்சம் டொபசிட் செய்தால், மாதம் 20 ரூபாய் கொடுப்போம். கூடவே மாருதி ஸ்விஃப்ட் கார் கொடுப்போம்.'' - இப்படியெல்லாம் விளம்பரங்கள் அவ்வப்போது எட்டிப்பார்த்தபடியேதான் உள்ளன.

இந்தத் தொகைகளைக் கணக்குப்போட்டுப் பார்த்தால்... 200%, 300% வட்டி என்கிற அளவுக்கு வருகிறது.
முதலீட்டுக்கு, இந்த அளவுக்கு எப்படி பணத்தைக் கொடுக்க முடியும்? இப்படி நிதியைத் திரட்டும் ஒரு நிறுவனம், எந்த வகையில் வருமானம் பார்த்து இந்த அளவுக்கான தொகையை கொடுக்க முடியும் என்பதையெல்லாம் யோசிப்பதற்கு மக்களுக்கு நேரமே இருப்பதில்லை.

gold
gold

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனே, ஓடிப்போய் ஒரு லட்ச ரூபாயை டெபாசிட் செய்துவிட்டு, மறுநாளிலிருந்து வட்டிக்கணக்கு போட ஆரம்பித்துவிடுவார்கள்.
அப்படியே சிலர் யோசித்தாலும், `முதல் நபராக போய் பணத்தைக் கட்டிவிட்டால் நமக்குக் கிடைத்துவிடும். ஆறு ஏழு மாதத்துக்குப் பிறகு, அந்தக் கம்பெனிக்காரன் கடையை மூடினாலும் நமக்குக் கவலையில்லை... முதல் தேறிவிடும்' என்று வெகு புத்திசாலித்தனமாக யோசித்து பணத்தை முதலீடு செய்பவர்களும் உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதோ... லேட்டஸ்ட்டாக, `ஒரு லட்சம் டெபாசிட் செய்தால், மாதம் ரூ.30,000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்' என்றொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது `ஆருத்ரா கோல்டு கம்பெனி’ என்கிற பெயரில் புதிதாக உருவாகியிருக்கும் ஒரு நிறுவனம். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரிலிருந்து வேலூர் நோக்கிச் செல்லும் சாலையில் இருக்கிறது சேவூர். இங்கேதான் உதயமாகியுள்ளது இந்த நிறுவனம். வழக்கம்போல மக்கள் கூட்டம் மொய்க்க ஆரம்பித்துள்ளது.

Chit Fund
Chit Fund

`இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்கிற பாடல் வரிகள்தான் இந்த அறிவிப்பைக் கேட்டதும் ஞாபகத்துக்கு வருகிறது. இத்தகைய திட்டங்களுடன் களத்தில் குதித்த ஏகப்பட்ட கம்பெனிகள், மூட்டை மூட்டையாகப் பணத்தைக் கட்டிக்கொண்டு காணாமல் போன சம்பவங்கள் காலகாலமாக நடந்துகொண்டே உள்ளன. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைக் கூற முடியும். ஒரு நிறுவனத்தின் பித்தலாட்டம் வெளியில் கசிந்து, அதை மீடியாக்கள் செய்தியாக்குவதற்குள், இன்னொரு நிறுவனம் வேறொரு ஊரில், வேறொரு வித்கையைக் காட்டி, பணத்தை கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு லட்ச ரூபாய் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டால் மாதம் 330 ரூபாய்தான் கிடைக்கும். இது 4% வட்டி. ஃபிக்சட் டெபாசிட் செய்தால் மாதம் 460 ரூபாய் கிடைக்கும். இது, 5.5% வட்டி. மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட வகையில் முதலீடு செய்தால் மாதம் 1,000 ரூபாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது 12% வட்டி (இது பங்குச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கூடவோ, குறையவோ செய்யும்).

இத்தகைய சூழலில், மாதம் 30,000 ரூபாய் தருகிறேன் என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது. இது, 360% வட்டி. இந்த அளவுக்கு வருமானத்தைத் தரக்கூடிய தொழில் ஒன்று இருக்கிறது என்றால், ஒன்று கள்ளநோட்டாக இருக்கலாம். அல்லது கொள்ளையடிப்பதாக இருக்கலாம். அப்படியிருக்க, மாதம் 30,000 ரூபாய் வட்டி என்பதை நம்பி எப்படி முதலீடு செய்ய முடியும்?

 interest
interest

கவர்ச்சிகரமான திட்டங்களைக் கூறி பொதுமக்களிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு அனுமதியே கிடையாது. அப்படி நிதி திரட்டுவது என்றால், பாண்ட் உள்ளிட்ட வகைகளில்தான் செய்யவேண்டும். அதாவது, மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவாதத்துடன்கூடிய பாண்ட் என்கிற வகையியே நிதி திரட்ட வேண்டும். ஆனால், அந்த விதிமுறைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல், இஷ்டம்போல கவர்ச்சி வட்டி விகிதங்களைக் கூறி பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடுவது தொடர்கதையாகவே உள்ளது.

இத்தகைய நிறுவனங்களை முளையிலேயே கிள்ளி எறியாமல், கடைசியில் ஓட்டமெடுத்ததும் வழக்குப் பதிவதை மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்துவருகின்றன. கில்லாடிகளாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள், அந்தக் கொள்ளையர்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வேலையையும் செய்வதால், ஒரு கட்டத்துக்கு மேல் அந்தக் கொள்ளையர்கள் எளிதாக வெளியில் வந்து, வேறு ரூட் போட்டு கொள்ளையை ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த ஆரூத்ரா கோல்டு கம்பெனியின் பின்னணி... முன்னணி; நதிமூலம்... ரிஷிமூலம் பற்றியெல்லாம் நம் கைவசம் தகவல் ஏதும் இல்லை. ஆனால், மாதம் 30,000 ரூபாய் என்று சொல்லி நிதி திரட்ட ஆரம்பித்திருப்பதுதான் சந்தேகத்தைக் கிளப்புகிறது. தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சேவூரில் ஒரு தனியார் விடுதியில் வைத்துதான் இந்த நிறுவனத்தின் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் கோடிக்கணக்கில் மக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. எந்தவொரு விளம்பர அறிவிப்பும் இன்றி, எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், மக்களை எப்படி ஈர்த்தது?

Money (Representational Image)
Money (Representational Image)

பொதுவாக இதுபோன்ற நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு முன்பாக, `கிரவுண்டு வொர்க்‘ என்று சொல்லப்படுகிற களப்பணியை சம்பந்தப்பட்ட நபர்கள் செய்கிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் மூலமே திட்டம் பற்றி வாய்வழியாகப் பரப்புகிறார்கள். பெரும்பாலான மக்கள், வட்டிக்கு வாங்குவது, முதலீடு செய்வது போன்ற விஷயங்களுக்காகப் பெரிதும் நம்புவது உறவு மற்றும் நட்புகளைத்தான். இதை நன்றாகத் தெரிந்துகொண்டுதான், இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் களம் காண்கின்றன.
கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து பெருக்க வேண்டும் என்பது சரியான முடிவே. அதை முறையான வகைகளில் முதலீடு செய்யும்போது பிரச்னை இல்லை. ஆனால், பேராசை காரணமாகக் குறுகிய காலத்தில் அதிக வருமானம் வேண்டும் என நினைத்து, மோசடி நிறுவனங்களில் பணத்தை இழப்பது கொடுமையே!

ஒரு முதலீட்டுத் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியவந்தால், அந்தத் திட்டம் பற்றி முதலில் நன்கு விசாரியுங்கள். யார் அந்நிறுவனத்தின் உரிமையாளர்? எதற்காக இந்த முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்? எப்படி இதன் மூலம் வருமானம் கிடைக்கிறது என அனைத்தையும் அலசி ஆராய்வதைத்தான் முதலில் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகே முதலீடு செய்வது குறித்து யோசிக்க வேண்டும்.

முதலீட்டை வாங்கும் நிறுவனம், அரசாங்கத்திடம் முறையாக பதிவுபெற்ற நிறுவனம்தானா? முதலீடுகளை வாங்குவதற்குரிய தனியான அனுமதிகளைப் பெற்றுள்ள நிறுவனம்தானா? அதன் உரிமையாளர் தவறான பின்னணி ஏதும் இல்லாத நபர்தானா? ஏற்கெனவே ஈமு கோழி, காந்தப்படுக்கை, இரிடியம் என்று மோசடி திட்டங்களை நடத்தி, மக்கள் பணத்தைச்சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி மீண்டும் வேறு பெயரில் மோசடியில் இறங்கியிருக்கிறாரா?

Investment (Representational Image)
Investment (Representational Image)

முதலீட்டுக்கு, சம்பந்தபட்ட நிறுவனம் தருவதாகச் சொல்லும் வட்டித்தொகை, நியாயமான வட்டித்தொகைதானா?
குறிப்பிடப்படும் வட்டித்தொகையானது, நாம் முதலீடு செய்யும் தொகையை, சம்பந்தபட்ட நிறுவனம் வேறு நியாயமான விஷயங்களில் முதலீடு செய்து வருமானமாக ஈட்டக்கூடிய அளவுக்கானதுதானா? மத்திய ரிசர்வ் வங்கி குறிப்பிடும் கவர்ச்சிகரமான வட்டி உள்ளிட்ட அம்சங்கள் இல்லாமல் நிதியை சம்பந்தபட்ட நிறுவனம் திரட்டுகிறதா?

சம்பந்தபட்ட நிறுவனம் திவால் நிலைக்கு ஆளாகிவிட்டால், நம்முடைய முதலீட்டுக்கு மத்திய-மாநில அரசுகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் உத்தரவாதம் இருக்கிறதா? இப்படி பல்வேறு கேள்விகளை எழுப்புங்கள். இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பதில்கள் இருக்கின்றனவா என்று கேளுங்கள். அந்த பதில்களை எழுத்துப்பூர்வமாக கேளுங்கள். அப்படி பதில்கள் கிடைக்கும்பட்சத்தில் உங்களுக்குத் தெரிந்த நிதி ஆலோசகர்கள், வழக்கறிஞர்களிடம் அந்தப் பதில்கள் குறித்து ஆலோசியுங்கள். அல்லது ஆசிரியர், நாணயம் விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-600 002 முகவரிக்கு தபால் மூலமாகவும் nav@vikatan.com என்கிற இமெயில் முகவரிக்கும் அனுப்பி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் எழுப்பும் பல கேள்விகளில், ஏதாவது ஒரு கேள்வியில் உங்களுக்குச் சந்தேகம் வந்தாலும் அந்த முதலீட்டுத் திட்டங்கள் முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது. `ஈமூ கோழி‘, காந்தப்படுக்கை, ஸ்ரீதேவி கோல்டு ஹவுஸ், அனுபவ் தேக்கு மரத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நாமறிந்ததே! அந்தத் திட்டங்களில் முதலீடு செய்து இன்றளவும் நடைபிணமாக நம் கண்முன்னே பலரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

Scam (Representational Image)
Scam (Representational Image)
Photo by Mikhail Nilov from Pexels

அத்தகைய சூழலிலும், தொடர்ந்து மோசடித் திட்டங்களை பலர் அரங்கேற்றுவதற்குக் காரணமே... நம்முடைய பேராசையும் அறியாமையும்தான். மீண்டும் மீண்டும் இத்தகைய நிறுவனங்களிடம் சிக்கி பணத்தை இழக்காமலிருக்க, கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள்.

மோசடி செய்யும் நோக்கோடு வலைவிரிக்கும் நிறுவனங்களை உடனுக்குடன் கண்டறிந்து ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவதுதான் அரசாங்கத்தின் தலையாய கடமை. அதைவிடுத்து, அந்தக் கொள்ளையர்களிடமும் கொள்ளையடிக்கலாம் என்று கணக்குப்போடும் அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்தினால், மக்களாட்சி என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism