Published:Updated:

`நிர்பயா வழக்கில் நிறைவேற்றப்பட்ட தூக்கு’ - 5 மணிநேரம் நடந்த பிரேதப் பரிசோதனை!

நிர்பயா வழக்கு
நிர்பயா வழக்கு

தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கும் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களுக்கும் உடற்கூறாய்வு செய்வதில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

`டிசம்பர் 16’ 2012 நள்ளிரவில் தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டார். இந்த வழக்கில் சிறார் உட்பட 6 பேர் கைதானார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்தப்பெண் டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். மகளை இழந்த ஆஷா தேவி, சட்டப்போராட்டத்தைக் கையிலெடுத்தார். மகளின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என முடிவு செய்தார்.

ஆஷா தேவி
ஆஷா தேவி

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறார் விடுதலையானார். முக்கியக் குற்றவாளியான ராம்சிங், திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஏனைய குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க பல்வேறு வேலைகளில் ஈடுபட்டது குற்றவாளிகள் தரப்பினர். குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய முயற்சியால் 3 முறை தூக்குத் தண்டனை தேதியை தள்ளிவைத்தார். இறுதியாக நேற்று (20.3.2020) காலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். நான்குபேரின் உடல்களையும் மருத்துவர் ஆய்வு செய்து உயிர்பிரிந்துவிட்டது என அறிக்கை அளித்தபின்னர், உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்காக தீனதயால் உபாத்யாயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

`7 வருடங்கள்; மேல்முறையீடு நிராகரிப்பு!’ -நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

மருத்துவர் பி.என்.மிஸ்ரா தலைமையிலான மருத்துவர்கள் நான்கு பேரின் உடல்களையும் உடற்கூறாய்வு செய்தனர். சுமார் 5 மணிநேரம் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதையடுத்து உறவினர்களிடம் அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து பேசிய மருத்துவர் பி.என்.மிஸ்ரா, ``தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகள் நால்வரின் உடல்களை உடற்கூறாய்வு செய்வதற்கு எங்களுக்கு சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை தேவைப்பட்டது. உடற்கூறாய்வு செய்யும்போது அவை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கும் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களுக்கும் உடற்கூறாய்வு செய்வதில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

தூக்கு
தூக்கு

அனுபவம் வாய்ந்த ஹேங்மேன் ஒருவர் சிறைக் கைதிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றும்போது உடையும் கழுத்து எலும்புகளுக்கும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்பவர்களின் கழுத்து எலும்புகளுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கும். கழுத்து எலும்புகள் உடைந்தவுடன் அவர் மயக்க நிலைக்குச் சென்றுவிடுவார். அதையடுத்து, சில நிமிடங்களில் அவர் உயிரிழந்துவிடுவார்.

சிறை விதிமுறைகளின்படி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்வோம். இதயத்துடிப்புகளை வைத்து இதைக் கணக்கிடுவோம். சிறை விதிகளைப் பின்பற்றி முறையாக தூக்கிலிடப்பட்ட பின் 15 முதல் 20 நிமிடங்கள் அந்த நபரின் இதயம் துடித்துக்கொண்டே இருக்கும். அவ்வாறு இருந்தால் தூக்குத் தண்டனையானது முறையாக நிறைவேற்றப்பட்டது என எடுத்துக்கொள்வோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு