Published:Updated:

தூத்துக்குடி: இலங்கைக்குத் தப்ப முயன்ற இங்கிலாந்து போதைப்பொருள் கடத்தல்காரர்! - சிக்கியது எப்படி?

கைதுசெய்யப்பட்ட ஜோனாதன் தோர்ன்
கைதுசெய்யப்பட்ட ஜோனாதன் தோர்ன்

போதைப்பொருள் கடத்தலுக்காக 21 முறை சிறைத் தண்டனைபெற்ற, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர், தூத்துக்குடியிலிருந்து கடல்வழியாக இலங்கைக்குத் தப்ப முயன்றபோது க்யூ பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

தூத்துக்குடி, தாளமுத்துநகர் அருகேயுள்ள முத்தரையர் காலனி கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் கடந்த இரண்டு நாள்களாகச் சுற்றித் திரிந்திருக்கிறார். இது குறித்து க்யூ பிரிவு போலீஸார், அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் என்பது தெரியவந்தது. அவர் முன்னதாக, பெங்களூருலிருந்து வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். இங்குள்ள பிரபல ஓட்டலில் தங்கியிருந்தாராம். பின்னர் தூத்துக்குடியிலிருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி இலங்கைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தாராம்.

ஜோனாதன் தோர்ன்
ஜோனாதன் தோர்ன்

இதற்காக கடற்கரையில் நின்றபோது பிடிபட்டிருக்கிறார். ஜோனாதன் தோர்ன் பிடிபட்டது குறித்து க்யூ பிரிவு போலீஸாரிடம் பேசினோம், “ஜோனாதன் தோர்ன், இங்கிலாந்திலுள்ள லிட்டில் ஹாம்ப் பகுதியைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு, கோவா மாநிலம் ஷலி கோவாவில் தங்கியிருந்திருக்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தவர், கார் மூலம் கடந்த 9-ந் தேதி, தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார்.

அவரிடமிருந்து இங்கிலாந்து மற்றும் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்டுகள், இரண்டு ஐபோன்கள், ரூ.2 லட்சம் பணம், இலங்கை மற்றும் அரபு நாடுகளின் ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம். அவர், இந்தியாவிலேயே வசிப்பதற்காக, ’ஐ.சி.ஓ’ என்ற இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான அட்டையைப் பெறுவதற்காக, கோவாவில் மணிப்பூரைச் சேர்ந்த வாஷூம் என்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார்.

ஜோனாதன் தோர்ன்
ஜோனாதன் தோர்ன்

கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம், மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 226 கிலோ கேட்டமைன், 30 கிலோ ஓப்பியம், 50 கிலோ ஹஷீஷ் ஆகிய போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஜோனாதன் தோர்னும் ஒருவர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவருக்குத் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவாவில் இருந்திருக்கிறார்.

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் தப்பித்துச் செல்வதற்காக இடைத்தரகர் ஒருவரின் மூலம் படகின் உரிமையாளரைச் சந்திப்பதற்காக கடற்கரைப் பகுதியில் சுற்றித் திரிந்தபோதுதான் அவரை விசாரித்து பின்னர் கைதுசெய்துள்ளோம். ஜோனாதன் மீது பாஸ்போர்ட் சட்டவிதி, 12(1)ஏ.ஆர்/டபிள்யூ 3 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றனர்.

அவரை தூத்துக்குடி முதலாவது ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நீதிபதி ராஜகுமரேசன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக இங்கிலாந்து நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகள் மூலம் ஜோனாதன் பல முறை கைதாகியுள்ளார்.

கைதுசெய்து அழைத்துச் செல்லப்படும் ஜோனாதன்
கைதுசெய்து அழைத்துச் செல்லப்படும் ஜோனாதன்

இதுவரை 21 முறை தண்டனை பெற்றுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டுதான் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார். அவரை தற்போதும் இங்கிலாந்து நாட்டின் போலீஸார், உளவுப்பிரிவு ஏஜென்சிகள் தேடிவருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்புத் துறைகளில் முக்கியமான அமைப்புகளான ’என்.சி.ஏ’ மற்றும் ‘எஸ்.ஓ.சி.ஏ’ ஆகியவற்றிலிருந்து அதிகாரிகள் குழுவினர் கோவா வரை வந்துள்ளனர். அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக இலங்கைக்குத் தப்பிச்செல்ல அவர் முயன்றிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு