கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு விடுதியில் இருந்து காவலன் செயலி மூலமாகக் காவல் கட்டுப்பாட்டு அறையை ஒருபெண் தொடர்புகொண்டார். "அரைமணி நேரமா கழிவறைக்குள்ளேயே மாட்டிக்கிட்டு நிக்குறேன். எப்படியாச்சும் காப்பாத்துங்க ப்ளீஸ்...” எனக் கண்ணீர் விட்டுள்ளது அப்பெண்குரல். அவருக்குத் தைரியம் சொன்ன கட்டுப்பாட்டு அறை காவலர்கள், ஐந்தே நிமிடத்தில் ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ பூஞ்சோலை, முதல்நிலைக் காவலர் சங்கர் ஆகியோரை அந்த விடுதிக்கு அனுப்பி வைத்தனர். கழிவறையின் மாற்று சாவி கிடைக்காததால், கதவை உடைத்து அப்பெண்ணை போலீஸார் காப்பாற்றினர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இச்சம்பவம் தொடர்பாகச் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கடிதம் எழுதிய அப்பெண், "போலீஸ்னாலே ஒரு கெத்துதான்னு நிரூபிச்சுட்டீங்க. கழிவறை அறைக் கதவை போலீஸ் எஸ்.ஐ உடைச்சு என்னைய காப்பாற்றினப்போ, உடைஞ்சது கதவு மட்டுமில்ல, என்னோட பயமும்தான். என் மொபைலுக்குள்ள காவலன் செயலி மூலமா தமிழ்நாடு காவல்துறையே துணையா இருக்கு. ரொம்ப பாதுகாப்பா உணர்றேன், தேங்க்ஸ்” என்று நன்றி தெரிவித்தார். இதையடுத்து அக்காவலர்களை நேரில் வரவழைத்து கமிஷனர் பாராட்டியுள்ளார். இதுபோல தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் காவலன் செயலி மூலமாகக் குறைகள் களையப்பட்டு, தமிழக காவல்துறையால் காப்பாற்றப்படுகின்றனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகாவலன் செயலியைக் கடந்த 2018-ம் ஆண்டு, ஜூன் 4-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதுவரை மொத்தம் 11,02,213 பேர் காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆப்பிள் ஐ.ஓ.எஸ்ஸில் 50,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பதிவிறக்கம் செய்தவர்களில் சுமார் எட்டரை லட்சம் பயனாளர்கள்தான் காவலன் செயலியைப் பயன்படுத்துகின்றனர். இதில் மூன்றரை லட்சம் பேர் ஆண்கள். தமிழகம் முழுவதும் ஒரு பெரிய நெட்வொர்க்கை அமைத்துள்ள காவலன் செயலியைக் கண்காணிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவின் ஏ.டி.ஜி.பி அசோக்குமார் தாஸ் ஐ.பி.எஸ், டி.ஐ.ஜி ஆசியம்மாள் ஐ.பி.எஸ், ஆய்வாளர் ஶ்ரீனிவாசன் ஆகியோரின் மேற்பார்வையில் பணிகள் நடைபெறுகின்றன. இவர்களில் காவலன் செயலின் முதுகெலும்பாக அறியப்படுபவர் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன்.

தினந்தோறும் சராசரியாக 500 அழைப்புகள் வரை காவலன் செயலிக்கு வருகின்றன. இப்படி வருபவற்றில் பெரும்பாலானவை தவறுதலாகப் பட்டனை அழுத்துவதால் வரும் அழைப்புகள். இதுபோக உண்மையான புகார்களின் எண்ணிக்கை, அவை மீது காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை போன்ற விவரங்கள் தினந்தோரும் ரிப்போர்ட்டாகத் தயாரிக்கப்பட்டு உயரதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது. காவலன் செயலியைப் பெண்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை, யார் வேண்டுமானாலும் ஆபத்துக் காலத்தில் அதை உபயோகிக்கலாம். தனியாக இருக்கும் வயது முதிர்ந்தோரும் இதைப் பயன்படுத்தி காவல் உதவியைக் கோரலாம். தொழில்நுட்ப ரீதியாகக் காவல்துறையில் ஒரு பெரிய வெளிப்படைத்தன்மையைக் காவலன் செயலி உருவாக்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எப்படிச் செயல்படுகிறது காவலன் செயலி?
மக்களிடம் பெருவரவேற்பை பெற்றுள்ள காவலன் செயலியின் செயல்பாடு குறித்து அறிய எழும்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு விசிட் அடித்தோம். காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போதே, பதிவிறக்கம் செய்பவரின் தொலைபேசி எண், அவரது இரண்டு நெருங்கிய தொடர்புகளின் அவசர உதவி எண் கேட்கப்படுகிறது. ஆபத்துக் காலத்தில் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, இந்தச் செயலியிலுள்ள 'எஸ்.ஓ.எஸ்.' பட்டனை அழுத்தினால் போதும், உடனடியாக எழும்பூரிலுள்ள போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துவிடும். ஐந்து நொடிகளுக்குள் அந்த அழைப்பை கேன்சல் செய்யும் வசதியும் உள்ளது.

அழைப்பை ஏற்று பிரச்னைகளைக் கேட்பதற்கென்றே ஷிப்டுக்கு 25 பேர் வீதம், மூன்று ஷிப்டுகளில் ஆட்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பிரச்னையைக் கேட்டுக்கொண்டு, அவர்களுக்கு மேலுள்ள பெண் காவலர்களுக்குத் தகவலை அளிப்பார்கள். இதற்காக ஷிப்டுக்கு 15 பேர் வீதம் மூன்று ஷிப்டுக்கு பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உதாரணத்துக்கு, கோவையில் இருந்து ஒரு பெண் உதவி வேண்டி காவலன் செயலி மூலமாகத் தொடர்பு கொண்டார் என்றால், அவரது பிரச்னை விவரங்கள் அவர் அருகிலே உள்ள காவல் நிலையத்துக்கு பரிமாறப்படும். உடனடியாக, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் இருந்து காவலர்கள் புறப்பட்டுச் சென்று உதவி தேவைப்படுவோரின் குறைகளைக் கேட்டறிவார்கள். குறைந்தபட்சமாக 5 நிமிடத்திலும் அதிகபட்சமாக 20 நிமிடத்திலும் காவல் செயலி மூலமாக பிரச்னைகள் களையப்பட்டுள்ளன.
அவசர போலீஸ் உதவி எண் 100-ஐ தொடர்புகொண்டு நமது பிரச்னைகளைக் கூறுவோம். இப்போது காவலன் செயலியிலுள்ள 'எஸ்.ஓ.எஸ்.' பட்டனை தொட்டுவிட்டால் போதும், போலீஸாரே நம்மைத் தொடர்புகொள்வார்கள். இதுதான் இதிலுள்ள ஸ்பெஷாலிட்டி. அதுபோல, பட்டனை தொட்டதும் 15 நொடிக்கு உங்கள் மொபைலின் பின்பக்க கேமரான் ஆன் ஆகி வீடியோவை பதிவு செய்துகொள்ளும். இந்த வீடியோவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துவிடும். நீங்கள் எந்த சூழலில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை போலீஸார் கண்டுபிடிக்க இதுவசதி செய்கிறது. பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தில் இன்டெர்நெட் தொடர்பு இல்லையென்றாலும் கவலையில்லை, எஸ்.எம்.எஸ் மூலமாக ஆபத்து தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு பகிரப்பட்டு, சம்பந்தப்பட்டவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். ஆபத்து காலக்கட்டத்தில் அவர்கள் அழைத்தால் மட்டும்தான், இந்த கேமரா, லொகேஷன் ஷேரிங் நடைபெறுகிறதே தவிர, எந்த சூழலிலும் யாரையும் நாங்கள் வேவு பார்ப்பதில்லை" என்றார்.

காவலன் செயலி தொடங்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை 36,563 அழைப்புகள் காவலன் செயலி மூலமாக ஏற்கப்பட்டு, பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதில், ஈவ் டீசிங் புகார்கள் 2,250, பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் கொடுமை புகார்கள் 700, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் புகார்கள் 2,925 ஆகியவை காவல்துறையினரால் தீர்க்கப்பட்டுள்ளன. இதுபோக, காவலன் செயலி மூலமாக இதுவரை 21,848 விபத்து புகார்கள் பெறப்பட்டுள்ளன. இப்புகார்களை உதறித்தள்ளாமல் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே அழைப்புகளை மடைமாற்றுகிறார்கள். குழந்தை திருமணம் தொடர்பாக 1,310 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பாக 1,020 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எழும்பூரிலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்குதான் தமிழகத்திலிருந்து அனைத்து அழைப்புகளும் வருகின்றன. இங்கேயிருந்துதான் மாவட்டக் காவல்துறைக்கு தகவல் பறிமாறப்படுகிறது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் காவலன் செயலி மூலமாக யாரேனும் அதிருப்தி தகவலைப் பகிர்ந்தால்கூட, உடனடியாக அந்தத் தகவல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்தச் செயலி வெறும் ஆபத்துக்காக உதவுவது மட்டுமல்ல, அசாதாரண சூழலில் இச்செயலி மூலமாக பல்வேறு தகவல்களைக் காவல்துறையுடன் பொதுமக்கள் பகிர்ந்துகொள்ளவும் முடியும். நமக்கு அருகிலிருக்கும் காவல் நிலையத்தின் முகவரி, போன் நம்பரை அறியும் வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. ஒரு செயலி மூலமாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ததோடு, அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊட்டியுள்ளது காவல்துறை. சபாஷ்!