Published:Updated:

சொத்து, ஆசை, சயனைடு...பெண் நடத்திய திட்டமிட்ட கொலைகள்! - புதிய தகவல்கள்

ஜோதிடர் கிருஷ்ணகுமார். தமிழகம் மற்றும் கேரளாவில் இவர் பிரபலம். தமிழ்ப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, மக்களை ஈர்ப்பது கிருஷ்ணகுமாரின் வழக்கம்.

கொலை செய்த ஜோலி
கொலை செய்த ஜோலி

கேரளாவில் சொத்துக்காக கணவர் உட்பட 6 பேரைக் கொலை செய்த ஜோலிக்கு பிரபல ஜோதிடர் ஒருவர் உதவியதாகச் சொல்லப்படுகிறது. 14 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் ஜோலியின் கணவர் ராய், மாமனார் டாம் தமாஸ், மாமியார் அன்னம்மா உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகளைச் செய்த ஜோலிக்கு கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் உதவியதாகச் சொல்லப்படுகிறது. ஜோலியின் சொந்த ஊர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை. இவரின் பெற்றோர், இந்த ஊரில்தான் வசிக்கின்றனர்.

ஜோதிடர் கிருஷ்ணகுமாரின் விளம்பரம்
ஜோதிடர் கிருஷ்ணகுமாரின் விளம்பரம்

இதே ஊரைச் சேர்ந்த ஜோதிடர் கிருஷ்ணகுமார். தமிழகம் மற்றும் கேரளாவில் இவர் பிரபலம். தமிழ்ப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, மக்களை ஈர்ப்பது கிருஷ்ணகுமாரின் வழக்கம். ஜோதிடர் கிருஷ்ணகுமார் கொடுத்த பொடியை ராய்க்கு தினசரி சாப்பிடக் கொடுத்ததாகவும், தன் கணவரின் கையில் கிருஷ்ணகுமார் கொடுத்த தகடையும் கட்டியதாகவும் போலீஸ் விசாரணையில் ஜோலி கூறியதாகத் தகவல் வெளியானது.

ஆனால், தனக்கு ஜோலியைத் தெரியாது என்று ஜோதிடர் கிருஷ்ணகுமார் மறுத்துள்ளார். போலீஸார் தன்னைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாகவும், தான் விபூதி மட்டுமே கொடுப்பதாகவும், அதை நெற்றியில் இட மட்டுமே கூறுவேன். சாப்பிடுவதற்கு யாருக்கும் எதுவும் கொடுப்பதில்லை' எனவும் கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

கொலைகளில் ஈடுபட்ட ஜோலி
கொலைகளில் ஈடுபட்ட ஜோலி

ஜோதிடரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பல விருதுகள் பெற்றதாகப் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. மாந்த்ரீகம் செய்து தயாரிக்கப்படும், `திரிபுரசுந்தரி யந்திரம்' வாழ்க்கையில் உங்களுக்கு எல்லா நலனையும் கொடுக்கும் என்று விளம்பரம் செய்வார். நம்பிக்கை கொண்டவர் மட்டும் தொடர்புகொள்ளவும் என்று தன் போன் எண்ணை விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யார் யார் எப்போது கொலை செய்யப்பட்டனர்?

கடந்த 2002-ம் ஆண்டு அன்னம்மா கொல்லப்பட்டார். 2008-ம் ஆண்டு அன்னம்மாவின் கணவர் டாம் தாமஸ் கொலை செய்யப்பட்டார். 2011-ம் ஆண்டு ஜோலியின் கணவர் ராய் தாமஸ், கழிவறையில் இறந்துகிடந்தார். உறவினர்கள் மாரடைப்பால் இறந்ததாகச் சொன்னார்கள். ஆனால், உடல்கூறு ஆய்வறிக்கையில் மரணத்துக்குக் காரணம் சயனைடு என்று தெரியவந்தது. போலீஸ் வழக்கு பதிந்தாலும், விசாரணையைச் சரியான முறையில் நடத்தவில்லை. 2014-ம் ஆண்டு அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ கொல்லப்பட்டார். ``ராய் தாமஸின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது, அவரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும்" என்று மேத்யூ கூறிக்கொண்டிருந்தார். இதையடுத்து, மேத்யூவைக் கொல்ல ஜோலி திட்டமிட்டார். ஜோலி வசித்த வீட்டருகேதான் மேத்யூ வசித்தார். மேத்யூவின் மனைவி வீட்டில் இல்லாதபோது, இவருக்கு ஜோலி காபியில் சயனைடு கலந்துகொடுத்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்

மேத்யூ மயங்கி விழுந்ததும், ஜோலிதான் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதுபோல நடித்துள்ளார். மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் மேத்யூ இறந்தார். இதே ஆண்டில் டாம் தாமஸின் சகோதரர் மகன் ஷாஜுவின் இரண்டு வயது மகள் ஆல்ஃபைன் கொலை செய்யப்பட்டார். இந்த ஷாஜுவை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பது ஜோலியின் ஆசை. ஷாஜுவுக்குக் குடும்பம் இருந்தால் அவரைத் திருமணம் செய்துகொள்ள இடைஞ்சலாக இருக்குமென்பதால், முதலில் குழந்தையைக் கொன்றார். பிரெட், இறைச்சியுடன் சயனைடு கலந்து குழந்தையை ஜோலி கொலைசெய்தார். 2016-ம் ஆண்டு ஷாஜுவின் மனைவி சிலி கொல்லப்பட்டார். 2017-ம் ஆண்டு ஷாஜுவை ஜோலி திருமணம் செய்துகொண்டார். அத்தனை பேரும் சயனைடு கலந்துகொடுத்தே கொல்லப்பட்டுள்ளனர். ஜோலிக்கு சயனைடு கொடுத்த நகைக்கடை தொழிலாளி பிரஜூகுமாரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை செய்யப்படுகிறார்கள், திடீரென்று, அதே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்படியிருந்தும் யாருக்கும் சந்தேகம் எழாதது விசித்திரமே!