Published:Updated:

திருத்தணி: பெண்ணுக்கு வயிற்றுவலி; 12 வருடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட கத்தரிக்கோல்; நடந்தது என்ன?!

திருத்தணி அரசு மருத்துவமனை
திருத்தணி அரசு மருத்துவமனை

திருத்தணியில் பிரசவ அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்டதாக எழுந்த குற்றசாட்டைத் தாமாக முன்வந்து விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மருத்துவத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரின் மனைவி குபேந்திரி. தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணிபுரிந்துவரும் பாலாஜி, 2008-ல் தன் மனைவியைப் பிரசவத்துக்காக அனுமதித்திருக்கிறார். மருத்துவமனையில் குபேந்திரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த சில மாதங்களில் பாலாஜியின் மனைவி குபேந்திரிக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை செய்ததால்தான் வயிற்றுவலி ஏற்படுகிறது என்று தம்பதி கவனக்குறைவாக இருந்திருக்கின்றனர். ஆனால், பல மாதங்கள் ஆகியும் வயிற்றுவலி தீராததால், குபேந்திரி தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று வயிற்றுவலிக்காக மருந்து மாத்திரைகள் வாங்கி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

பெண்ணின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கத்தரிக்கோல்
பெண்ணின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கத்தரிக்கோல்

இந்தநிலையில், குபேந்திரிக்கு சமீபத்தில் வயிற்றுவலி தீவிரமானதால், அவர் கணவர் பாலாஜி கடந்த மாதம் 18-ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவரை ஸ்கேன் செய்து பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வயிற்றில் கத்தரிக்கோல் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். குபேந்திரியின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்துத் தைக்கப்பட்டுள்ளதை வாய்வழியாக மட்டும் தெரிவித்த மருத்துவர்கள், ஸ்கேன் அறிக்கையை அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பாலாஜி சென்றிருக்கிறார். அங்கு குபேந்திரியின் வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலிருந்து கத்தரிக்கோலை அகற்றியிருக்கின்றனர். அகற்றப்பட்ட கத்தரிக்கோலை குபேந்திரியின் கணவர் பாலாஜியிடமும் காட்டியிருக்கின்றனர். ஆனால், அங்கும் சிகிச்சைக்கான அறிக்கைகளை தம்பதியிடத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதையடுத்து, பிரசவ சிகிச்சையின்போது அலட்சியமாகத் தன் மனைவியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்துத் தைத்த திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீதும், பரிசோதனை அறிக்கைகளை முறையாகத் தங்களிடம் ஒப்படைக்கத் தவறிய திருவள்ளூர் மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட குபேந்திரியின் கணவர் பாலாஜி தமிழக முதல்வர் தனிப் பிரிவுக்குப் புகார் மனு அனுப்பியிருந்தார்.

மனித உரிமைகள் ஆணையம்
மனித உரிமைகள் ஆணையம்

இந்தநிலையில், பாலாஜி முதல்வர் பிரிவுக்கு அனுப்பிய புகார் மனுவை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி துரை.சந்திரசேகர், பாலாஜியின் புகார் மனு தொடர்பாக இன்னும் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு