ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதிக்கு அருகே முட்புதரில் காயங்களுடன் ஆண், பெண் சடலங்கள் இருப்பதாக அந்தப் பகுதி காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அரை நிர்வாணமாக இருந்த இரண்டு சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்தவர்கள் யார் என்பது குறித்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி மாணிக்கம், அவர் மனைவி ராணி என்பது தெரியவந்தது. மாணிக்கம் தன் மகளின் திருமண செலவுக்கும், மகனின் படிப்பு செலவுக்கும் பலரிடமிருந்து லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், மாணிக்கம் தனியார் நிதி நிறுவனத்திடமும் கடன் வாங்கியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பெரும் நிதி நெருக்கடியிலிருந்த மாணிக்கத்தால் கடன் தொகையைச் சரியாகத் திருப்பித் தர முடியவில்லை. இந்தத் தம்பதியினர் தங்கள் மகளிடம் கடைசியாகப் பேசியபோது, சோளிங்கரில் ஒருவரிடம் கடன் வாங்கி அவசர கடனை அடைக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு அடுத்ததாக அவர்கள் இருவரையுமே தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில்தான், கைலாசபுரம் பகுதியில் இருவரும் உடலில் பல்வேறு காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
உயிரிழந்த ராணியின் சகோதரர் அரக்கோணம் மின்னல் கிராமத்தைச் சேர்ந்தவர். இறந்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தும்போது தான், தன் சகோதரிக்கு கடன் கொடுத்தவர்களால் அவரும், அவர் கணவரும் காரில் கடத்தப்பட்டுள்ளதாக அவர் அளித்திருந்த புகார் விவரம் காவல்துறையினருக்குத் தெரியவந்தது. போலீஸார் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கடன் கொடுத்தவர்கள் கடத்திக் கொலை செய்தார்களா அல்லது வேறு யாரும் கொலை செய்தார்களா என தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.