Published:Updated:

ராமேஸ்வரம்: அக்னி தீர்த்த கடலில் கோவை தம்பதி தற்கொலை - விபரீத முடிவுக்கு என்ன காரணம்?

தற்கொலை செய்துகொண்ட கோவிந்தராஜ், தனலெட்சுமி

``நாங்கள் ஆசை ஆசையாக வளர்த்த மகனை இழந்துவிட்டோம். மகன் இல்லாத இந்த வாழ்க்கை எங்களுக்குப் பிடிக்கவில்லை."

ராமேஸ்வரம்: அக்னி தீர்த்த கடலில் கோவை தம்பதி தற்கொலை - விபரீத முடிவுக்கு என்ன காரணம்?

``நாங்கள் ஆசை ஆசையாக வளர்த்த மகனை இழந்துவிட்டோம். மகன் இல்லாத இந்த வாழ்க்கை எங்களுக்குப் பிடிக்கவில்லை."

Published:Updated:
தற்கொலை செய்துகொண்ட கோவிந்தராஜ், தனலெட்சுமி

காசிக்கு நிகராக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் போற்றப்படுகிறது. இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகைபுரிகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அக்னி தீர்த்தக் கடலில் நூற்றுக்கணக்கான மக்கள் புனித நீராடிக்கொண்டிருந்தனர். அப்போது கடலில் சற்று தூரமாக ஆண், பெண் இருவர் ஒன்றாக இறந்தநிலையில் மிதந்துவருவதைப் பார்த்தனர். இதையடுத்து ராமேஸ்வரம் கடலோர காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீஸார் ஃபைபர் படகு மூலம் இருவரின் உடலையும் மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர்.

அப்போது துப்பட்டாவால் இடுப்பில் இருவரும் சேர்த்துக் கட்டியிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து இறந்த ஆணின் உடலை போலீஸார் சோதனை செய்தபோது அவரது பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டையைக் கைப்பற்றினர். அவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள சமத்தூர் எஸ்.பொன்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. இந்த முகவரியைவைத்து கோவை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி அவர்கள் விசாரணை நடத்தியதில் இறந்தவர்களின் உருக்கமான பின்னணி தெரியவந்ததாக ராமேஸ்வரம் கடலோர போலீஸார் கூறினர்.

தொடர்ந்து நாம் போலீஸாரிடம் பேசியபோது, இறந்த கோவிந்தராஜன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி தனலட்சுமி, இவர் சர்வோதயா சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு பிரபாகரன் (22) என்ற ஒரே மகன் இருந்திருக்கிறார்.

இடிப்பில் துணியைக் கட்டிக்கொண்டு தற்கொலை செய்த தம்பதி
இடிப்பில் துணியைக் கட்டிக்கொண்டு தற்கொலை செய்த தம்பதி

கடந்த ஆண்டு, ஜூலை மாதம் திடீரென அவர்களின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஒரே மகன் என்பதால் அவன்மீது அளவுகடந்த பாசம்வைத்திருந்த கோவிந்தராஜ், தனலெட்சுமி தம்பதி, `எங்கள் மகனின்றி வாழ முடியாது. நாங்கள் எங்காவது சென்று இறந்துவிடுகிறோம்’ என உறவினர்களிடம் அடிக்கடி கூறிவந்துள்ளனர். உறவினர்கள், அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றிவந்துள்ளனர். இருந்தும் மகன் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மனவேதனையில் இருந்துவந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் கடந்த 3-ம் தேதி யாரிடமும் எதுவும் தெரிவிக்காமல் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளனர். தொடர்ந்து மூன்று நாள்களாகியும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாமல் உறவினர்கள் தேடிவந்துள்ளனர். இருவரின் செல்போனும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பொள்ளாச்சி அருகே கோட்டூர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். தற்போது நாம் அளித்த தகவல்படி இறந்தது வீட்டைவிட்டு வந்த கோவிந்தராஜ், தனலெட்சுமி தம்பதி எனத் தெரியவந்தது. இதனையடுத்து கோட்டூர் போலீஸார் அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்துப் பார்த்தபோது கடிதம் ஒன்று சிக்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில், ``நாங்கள் ஆசை ஆசையாக வளர்த்த ஒரே மகனை இழந்துவிட்டோம். அவனுக்குக் கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்த்தோம். நாங்கள் மொத்தப் பாசத்தையும் அவன்மீது வைத்திருந்தோம். ஆனால் எங்களை அநாதையாக விட்டுவிட்டுப் போய்விட்டான். எங்கள் மகன் இல்லா வாழ்க்கையை வாழப் பிடிக்கவில்லை. எங்களின் மகன் எதிர்காலத்தில் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகச் சொத்துகளைச் சேர்த்துவைத்தோம். அந்தச் சொத்துகளைத் தனிப்பட்ட முறையில் யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. அதனால் எங்கள் மகன் கனீஸ்பிரபாகரன் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதற்கு கோவையைச் சேர்ந்த நான்கு பேரை நியமித்துள்ளோம்” எனக் குறிப்பிட்டிருந்ததாக கோட்டூர் போலீஸார் தெரிவித்ததாக ராமேஸ்வரம் போலீஸார் தெரிவித்தனர்.

இவர்கள் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பிவைத்தனர்.

மகன் இறந்த துக்கம் தாளாமல் கணவன், மனைவி ஒன்றாகக் கடலில் உயிரை மாய்த்துக்கொண்டது ராமேஸ்வரம் வந்த பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism