Published:Updated:

நெல்லை: ஒரே அறையில் கணவன், மனைவி தற்கொலை! - உருக்கமான தகவல்கள்

தற்கொலை செய்துகொண்ட மாரியப்பன், வடிவு
தற்கொலை செய்துகொண்ட மாரியப்பன், வடிவு

திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த தம்பதியர் திடீரென தற்கொலை முடிவை எடுத்துக்கொண்ட சம்பவம் உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்லை, தச்சநல்லூர் பகுதியிலுள்ள நல்மேய்ப்பன் நகரில் குடியிருந்துவந்தவர் மாரியப்பன். பெயின்ட்டராக வேலை செய்துவந்தார். 35 வயதான இவரின் மனைவி வடிவு (29). இருவருக்கும் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன.

``மனுவே போதும்; தற்கொலை முயற்சிகள் வேண்டாம்!” - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

இந்தத் தம்பதியக்குக் குழந்தை கிடையாது. வடிவு கர்ப்பமுற்றபோதிலும் கரு கலைந்துவிடுவதால், அது குறித்து மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். அத்துடன் ஜோதிடத்திலும் நம்பிக்கைவைத்து, அது தொடர்பான செலவுகளையும் இருவரும் செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், வடிவு கர்ப்பம் அடைந்ததால் கணவ்ன் மனைவி மட்டுமல்லாமல், குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். வடிவு, ஐந்து மாத கர்ப்பமாக இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்ததில், கரு கலைந்திருக்கிறது.

மாரியப்பன் வடிவு தங்கியிருந்த வீடு
மாரியப்பன் வடிவு தங்கியிருந்த வீடு

அதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மாரியப்பனும் வடிவும் மிகுந்த மன வேதனை அடைந்திருக்கிறார்கள். உறவினர்கள், இவர்கள் இருவரையும் தேற்றியபோதிலும் சோகத்துடனேயே இருந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருவரும் நேற்று இரவு அறையில் தூங்கச் சென்றிருக்கிறார்கள். காலையில் வீட்டுக் கதவு, திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் சந்தேகமடைந்து கதவைத் தட்டியிருக்கிறார்கள். ஆனால் திறக்காததால், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை செய்துகொண்ட தம்பதி
தற்கொலை செய்துகொண்ட தம்பதி

போலீஸார் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இருவரும் தூக்குமாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது. இருவரின் உடலையும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக போலீஸார் அனுப்பிவைத்தனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு