Published:Updated:

சென்னை: இரட்டைக் கொலை; தொட்டிக்குள் சடலங்கள்; தனியாக வசித்த தம்பதியருக்கு நேர்ந்த கொடூரம்!

கொலை
கொலை

வண்டலூர் அருகே தனியாக வசித்த தம்பதியர் கொலைசெய்யப்பட்டு, தண்ணீர்த் தொட்டிக்குள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்சன் தினகரன் (63). இவர் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி, கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வுபெற்றவர். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் ஆலிஸ் (55). ஆசிரியை. இவருக்கு இம்மானுவேல் (28) என்ற மகனும், பெனிட்டா (30) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பமாக கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் குடியிருக்கின்றனர். சாம்சன் தினகரனின் 2-வது மனைவி ஜெனட் (52). இவர் கொளப்பாக்கத்தில் குடியிருந்துவந்தார். இரண்டாவது மனைவி வீட்டுக்கு சாம்சன் தினகரன் சென்றிருந்தார்.

கொலைசெய்யப்பட்ட சாம்சன் தினகரன்
கொலைசெய்யப்பட்ட சாம்சன் தினகரன்

இந்தநிலையில், சாம்சன் தினகரனுக்கு முதல் மனைவியின் மகள் பெனிட்டா கடந்த 17-ம் தேதி போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் பக்கத்து வீட்டிலுள்ள ஒருவருக்கு போன் செய்து, அப்பா வீட்டில் இருக்கிறாரா என பெனிட்டா கேட்டார். உடனே அவரும், சாம்சன் தினகரன் வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார். அப்போது வீட்டில் யாரும் இல்லை என அவர் பெனிட்டாவிடம் கூறினார். அதன் பிறகும் சாம்சன் தினகரனுக்கு அவரின் மகள் பெனிட்டா பல தடவை போன் செய்தும் அவர் பதிலளிக்கவில்லை.

இதையடுத்து சாம்சன் தினகரனின் முதல் மனைவி குடும்பத்தினர் கொளப்பாக்கத்துக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்து. ஆனால் பின்பக்கக் கதவு திறந்து கிடந்தது. அதனால் பெனிட்டாவும் அவரின் குடும்பத்தினரும் ஒவ்வோர் அறையாகச் சென்று பார்த்தனர். அப்போது சாம்சன் தினகரனுக்குச் சொந்தமான இன்னொரு வீட்டிலுள்ள அறையில் ரத்தம் உறைந்து காணப்பட்டது. மேலும், அந்த அறை முழுவதும் மஞ்சள்தூள் சிதறிக்கிடந்தது. அதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஓட்டேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

கொலை
கொலை
representational image

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் தரைத்தளத்திலுள்ள தண்ணீர்த் தொட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஜெனட்டும், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சாம்சன் தினகரனும் சடலமாகக் கிடந்தனர். பின்னர் மறைமலைநகர் தீயணைப்புத்துறையினரின் உதவியோடு இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. அவை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சிசிடிவி கேமரா பதிவை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். இருவரும் எதற்காகக் கொலை செய்யப்பட்டார்கள் என விசாரணை நடந்துவருகிறது.

சென்னை: முன்விரோதம்; கத்திக்குத்து! - கொலை முயற்சி வழக்கில் அண்ணன், தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சாம்சன் தினகரனின் முதல் மனைவி ஆலீஸை கடந்த 2004-ம் ஆண்டு விவகாரத்து செய்துவிட்டு ஜெனட்டை பதிவுத் திருமணம் செய்திருக்கிறார். அதன் பிறகு முதல் மனைவி ஆலீஸ், அவரின் குழந்தைகளுடன் சாம்சன் தினகரன் பேசிவந்திருக்கிறார். சாம்சன் தினகரனின் முதல் மனைவியின் மகள் பெனிட்டாவின் திருமணத்துக்கு ஜெனட்டும் சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் ஜெனட்டின் தங்கை பிரேமாவின் மகள் ஸ்விட்டி என்பவர், ஜெனிட்டாவுக்கு 17-ம் தேதி போன் செய்து, சித்தி ஜெனட் போனை எடுக்கவில்லை. சித்தப்பா சாம்சன் தினகரனுக்கு போன் செய்தால் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் ஒருவர் எடுத்துப் பேசுகிறார் என்று கூறியிருக்கிறார்.

சிசிடிவி
சிசிடிவி

இதையடுத்து பெனிட்டாவும் தன்னுடைய அப்பா சாம்சன் தினரகனுக்கு போன் செய்திருக்கிறார். அப்போது போனை யாரும் எடுக்கவில்லை. அதனால்தான் சாம்சன் தினகரன் குடியிருந்த கொளப்பாக்கம், அண்ணாநகர், அம்பேத்கர் தெருவில் உள்ள வீட்டுக்கு பெனிட்டா, அவரின் அம்மா, தம்பி ஆகியோர் வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் சாம்சன் தினகரனும் ஜென்ட்டும் கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. அவர்களை யார் கொலை செய்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. மூன்று தனிப்படைகள் அமைத்து தேடிவருகிறோம். வீட்டில் தனியாக இருந்த தம்பதியர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சாம்சன் தினகரனின் செல்போன், பெட்ரோல் பங்க் அருகே வீசப்பட்டிருக்கிறது. ஜென்ட்டின் செல்போன், வீட்டின் அருகில் கிடந்தது. இருவரின் செல்போன்களையும் ஆய்வு செய்துவருகிறோம். சம்பவம் நடந்தபோது வீட்டுக்குள் மர்ம நபர்கள் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். வண்டலூர் அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு