Published:Updated:

பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்த மனைவி; அரிவாளால் வெட்டிய கணவர் கைது!

குழந்தைத் திருமணம் மற்றும் காதல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள், கணவர், பெற்றோர் மற்றும் உறவினர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் காப்பகங்களில் தங்க வைக்கப்படுவோரின் பாதுகாப்பை போலீஸார் உறுதி செய்ய வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் துரைபாண்டியன்(26). லாரி டிரைவரான இவருக்கு உமாமகேஸ்வரி (23) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். தம்பதிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்தது. இதனால் உமாமகேஸ்வரி, தனது இரு குழந்தைகளுடன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் வந்து தங்கியுள்ளார். மேலும், மதுபோதைக்கு அடிமையான தனது கணவர் தன் மீது சந்தேகம் கொண்டு கொடுமைப்படுத்துவதாக சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் விசாரணை நடத்திய சமூக நலத்துறையினர், உமாமகேஸ்வரி மற்றும் அவரது இரு குழந்தைகளை தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். அங்கு வைத்து துரைபாண்டி மற்றும் உமாமகேஸ்வரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து உளுந்தூர்பேட்டைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் அதன்பிறகும் தம்பதியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனிக்கு வந்த உமா மகேஸ்வரி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், உமாமகேஸ்வரியை அதே பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் உமாமகேஸ்வரி தனது இரு குழந்தைகளுடன் காப்பகத்தில் தங்கியிருந்தார். இதற்கிடையே தனது ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப்புத்தகத்தை உமாமகேஸ்வரி எடுத்துவந்துவிட்டதாகக் கூறி காப்பகத்திற்கு போன் செய்து தொந்தரவு கொடுத்துளளார், துரைபாண்டியன்.

போன் பேசிய கணவன்; கண்டித்த மனைவி; தாய், மகள் தற்கொலையில் முடிந்த தகராறு!
துரைபாண்டியன்
துரைபாண்டியன்

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென காப்பகத்திற்குள் நுழைந்த அவர், உமாமகேஸ்வரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்பக்க தலை, நெற்றி, கால் முட்டி ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த உமாமகேஸ்வரி தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காப்பக நிர்வாகி அளித்தப் புகாரின் பேரில், பழனிசெட்டிப்பட்டி போலீஸார் துரைபாண்டியனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைத் திருமணம் மற்றும் காதல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள், கணவர், பெற்றோர் மற்றும் உறவினர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் சமூக நலத்துறை மற்றும் போலீஸாரால் காப்பகங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பும் வரை போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. அவர்களின் பாதுகாப்பை போலீஸார் உறுதி செய்தால் மட்டுமே, இதுபோன்ற சம்பவங்கள் தொடராது என்கின்றனர் சமூகஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு