Published:Updated:

``மனைவி மயங்கியதும் குழந்தையோடு ஆந்திராவுக்குச் சென்றுவிட்டேன்"- கிண்டி கொலையில் சிக்கிய கணவன்

கணவன் பிரசாத்
கணவன் பிரசாத்

`எனக்கும் அவளுக்கும் சண்டை வந்தது. ஆத்திரத்தில் அடித்ததில், அவள் மயங்கிவிட்டாள். அதனால் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு வந்துவிட்டேன்' என மனைவி கொலையில் கைதான கணவன் போலீஸிடம் கூறியுள்ளார்.

சென்னை கிண்டி, மடுவாங்கரை, மசூதி காலனியில் வசிப்பவர் பிரசாத் (35). இவரின் மனைவி உஷா (30). இந்தத் தம்பதிக்கு பூஜா என்ற 5 வயதுப் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், பூட்டிய வீட்டுக்குள் உஷா இறந்து கிடந்தார். இதுகுறித்து உஷாவின் சகோதரர் வினோத்குமார் கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய சகோதரி உஷாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் உஷாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

பிரேதப் பரிசோதனையில் உஷா, அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாரின் சந்தேகப்பார்வை உஷாவின் கணவர் பிரசாத் மீது விழுந்தது. இதற்கிடையில் ஆந்திராவில் பதுங்கியிருந்த பிரசாத்தை, உறவினர்களே பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸார் பிரசாத்திடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பிரசாத், உஷா ஆகியோரின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கிறது. 2011-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பிறகு இருவரும் கிண்டியில் குடியிருந்து மாவு பிசினஸ் செய்து வந்தனர். உஷாவுக்கு திருமணத்தின்போது போடப்பட்ட நகைகளை பிரசாத் அடகு வைத்து ஆடம்பரமாகச் செலவழித்துள்ளார். அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

representational image
representational image

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி உஷா குடும்பத்தோடு ஆந்திராவுக்குச் சென்றுள்ளார். 18-ம் தேதி உஷாவும் குழந்தை பூஜாவும் ஆந்திராவிலிருந்து சென்னை வந்துள்ளனர். அப்போது இருவரும் ஊருக்கு வந்துவிட்டார்களா என்று உஷாவின் சகோதரர் வினோத்குமார் போனில் விசாரித்துள்ளார். அப்போது பேசிய உஷா வீட்டுக்கு வந்துவிட்டோம் என்று கூறியுள்ளார். இந்தச் சமயத்தில் பிரசாத், தன்னுடைய விலை உயர்ந்த டூவீலரை விற்றுள்ளார். அதனால் உஷாவுக்கும் பிரசாத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

18ம் தேதி மாலையில் கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் உஷாவை, பிரசாத் அடித்துள்ளார். அதில் அவர் மயங்கியுள்ளார். அதனால் பயந்துபோன பிரசாத், குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆந்திராவுக்குச் சென்றுவிட்டார். இந்தத் தகவல் வினோத்குமாருக்குத் தெரிந்ததும் அவர் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது பூட்டிய வீட்டுக்குள் உஷா இறந்துகிடந்துள்ளார். உஷாவை கொலை செய்த குற்றத்துக்காக பிரசாத்தைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.

பிரசாத், தன்னுடைய விலை உயர்ந்த டூவீலரை விற்றுள்ளார். அதனால் உஷாவுக்கும் பிரசாத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

போலீஸாரிடம் பிரசாத், சில தகவல்களைக் கூறியுள்ளார். அதில், ``நான் சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு பைக்கில்தான் செல்வேன். அதை என் மனைவி உஷா கண்டிப்பார். மேலும் கணக்குப்பார்த்து நான் செலவழிக்க மாட்டேன். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். பொங்கல் செலவுக்காக டூவீலரை விற்றேன். அதை உஷா கண்டித்தார். அதனால்தான் எனக்கும் அவளுக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது. மேலும், இட்லி மாவு விற்பனையில் தரமான பொருள்களைப் பயன்படுத்தும்படி மனைவியிடம் கூறினேன். ஆனால், அவள் என் பேச்சைக் கேட்காமல் ரேஷன் அரிசி, பருப்புகளைப் பயன்படுத்தினார். அதனாலும் எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் அவளை அடித்தேன். வாஷிங்மெஷின் டியூப்பால் கழுத்தை நெரித்தேன். அவள் மயங்கியதும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆந்திராவுக்குச் சென்றுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் கிண்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின் செல்ல