Published:Updated:

வேலூர்: அடிக்கடி சண்டை... விவாகரத்து முடிவு! - கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

யுவராஜ்
யுவராஜ்

விவகாரத்து பெறும் முடிவில் இருந்த மனைவியை இரும்புக்கம்பியால் கணவனே அடித்துக் கொன்ற சம்பவம், பேரணாம்பட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு, பத்தலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (22). கட்டட மேஸ்திரி. இவர் தன் தாய்மாமன் மகள் சுப்புலட்சுமியை (19) கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன நாள் முதல் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று மாலை யுவராஜுக்கும் சுப்புலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

விவாகரத்து பிரச்னையில் கொலையுண்ட சுப்புலட்சுமியின் சடலம்
விவாகரத்து பிரச்னையில் கொலையுண்ட சுப்புலட்சுமியின் சடலம்

ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி, கணவனை செருப்பால் அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற யுவராஜ், இரும்புக்கம்பியால் மனைவியை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் பலத்த காயமடைந்த சுப்புலட்சுமி சுருண்டு விழுந்திருக்கிறார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சுப்புலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுப்புலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து, மாமனார் கொடுத்த புகாரின்பேரில், பேரணாம்பட்டு போலீஸார் கொலை வழக்கு பதிந்து யுவராஜைக் கைதுசெய்துள்ளனர்.

யுவராஜ்
யுவராஜ்

விசாரணையில், சாதாரணமாகச் சின்னச் சின்ன விஷயத்துக்கே யுவராஜ் அடிக்கடி சண்டை போட்டதாகவும், அதனால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தாய் வீட்டுக்கே செல்லும் முடிவில் சுப்புலட்சுமி இருந்ததாகவும் தெரிகிறது. மகள் படும் துன்பத்தைப் பார்த்து சுப்புலட்சுமியின் தந்தையும் யுவராஜைக் கண்டித்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாகத்தான் கொலை நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது’’ என்கிறார்கள் பேரணாம்பட்டு போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு