Published:Updated:

`தொடர் துன்புறுத்தல், இரவு முழுவதும் டி.வி; மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!-புனே அதிர்ச்சி

கொலை நடந்த வீட்டைப் பார்வையிடும் போலீஸார்
கொலை நடந்த வீட்டைப் பார்வையிடும் போலீஸார்

புனேயில் இரவு முழுவதும் டி.வி பார்த்துக்கொண்டிருந்த மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் கைதுசெய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகிலுள்ள மாவலில் இருக்கும் சந்திவாடி என்ற கிராமத்தில் வசிப்பவர் யோகேஷ் யாதவ். இவரின் மனைவி சங்குனா ஜாதவ் (20). யோகேஷ் மனைவிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்திருந்தது. அதுவும் பெண் குழந்தை பிறந்திருந்ததால், யோகேஷ் தன் மனைவிமீது கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. லாரி டிரைவரான யோகேஷ், பெண் குழந்தை பிறந்த காரணத்துக்காக அடிக்கடி தன் மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்திவந்திருக்கிறாராம். இந்தநிலையில் இரவில் யோகேஷின் மனைவி, கணவன் உறங்கிய பிறகு டி.வி பார்த்துக்கொண்டிருந்தார். அவர் டி.வி பார்த்தபடி அப்படியே உறங்கிவிட்டதாகத் தெரிகிறது.

கொலை நடந்த வீட்டைப் பார்வையிடும் போலீஸார்
கொலை நடந்த வீட்டைப் பார்வையிடும் போலீஸார்

அதிகாலையில் யோகேஷ் எழுந்து பார்த்தபோதும் டி.வி ஓடிக்கொண்டிருந்தது. இதனால் கடும் கோபமடைந்த யோகேஷ், தன் மனைவியுடன் கடுமையாகச் சண்டையிட்டதோடு அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காலையில் வீடு திறந்துகிடப்பதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று பார்த்தபோதுதான் சங்குனா கொலை செய்யப்பட்டுக்கிடந்தது தெரியவந்தது. இது குறித்து உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து யோகேஷ் மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுவிக்கப்பட்ட தாய்!-பெற்ற குழந்தை கொலை வழக்கில் நடந்தது என்ன?

இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறுகையில், ``யோகேஷ் தன் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்ததால், கடந்த ஏழு மாதங்களாக மனைவியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்திவந்திருக்கிறார். இரவு முழுவதும் டி.வி ஓடிக்கொண்டிருந்ததை ப்பார்த்து கோபத்தில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு