Election bannerElection banner
Published:Updated:

போபால்: `மூன்றும் பெண் குழந்தைகள்!' - மனைவிக்கு முத்தலாக் கொடுத்து வெளியேற்றிய கணவர் கைது

கைது
கைது

தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகள் பிறந்ததால், ஆத்திரமடைந்த கணவர் ஒசாமா மனைவிக்கு முத்தலாக் அளித்திருக்கிறார்.

மூன்று மகள்களைப் பெற்றெடுத்ததற்காக தனது மனைவி மீது கோபமாக இருந்த ஷாஜகானாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மும்முறை 'தலாக்’ என்று உச்சரித்து தனது 29 வயது மனைவியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியிருக்கிறார்.

மும்முறை 'தலாக்' சொல்லி, ஒரு பெண்ணின் மணவாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் நடைமுறையை `சட்டவிரோதம்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2017-ம் ஆண்டு, இஸ்லாமியப் பெண்கள் இந்த விஷயத்தில் பாதிக்கப்படாமல் இருக்க ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது நீதிமன்றம். அதன் பிறகு மத்திய அரசு ஒரு மசோதாவைக் கொண்டுவந்தது. `ஒரே நேரத்தில் மூன்று முறை 'தலாக்' சொல்லி விவாகரத்து செய்வது சட்டத்துக்குப் புறம்பானது' என அந்த மசோதா சொன்னது. மேலும், நேரில் மட்டுமல்ல, எழுத்து, கடிதம், இ-மெயில், எஸ்.எம்.எஸ்,, வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்கள் வழியே தலாக் சொன்னாலும் அதுவும் சட்டவிரோதம்தான் என்கிறது அந்த மசோதா.

மசோதாவின் அடுத்த ஷரத்து, 'ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி, மனைவியை விவாகரத்து செய்ய முயன்றால் அந்தக் கணவர் குற்றவாளி. அதற்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அப்படிச் சிறைக்குக் கணவர் செல்ல நேரிட்டால், மனைவிக்கும் குழந்தைகளுக்குமான ஜீவனாம்சத்தை அளிக்க உத்தரவிடலாம்' என்று கூறுகிறது. இதுதான் முத்தலாக் சட்டத்தின் உள்ளடக்கம். இது, ஒரு மாத இடைவெளியில் 'தலாக்' சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறையை பாதிக்காது.

சட்டம்
சட்டம்

இந்தநிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலை அடுத்துள்ள ஷாஜகானாபாத்தில் வசித்துவரும் முகமது ஒசாமா என்பவருக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றன. ஒசாமாவின் மனைவி எட்டு வருடங்களில் மூன்று குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகள். தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட முகமது ஒசாமாவுக்கு, இது ஏமாற்றத்தை அளித்தது.

தன் மனைவிக்கு தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரமடைந்த கணவர் ஒசாமா, மனைவி மீது கோபமாக இருந்திருக்கிறார். ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஒசாமாவின் ஆசையை அவரது தந்தை முகமது தாகிர் ஆதரித்துவந்திருக்கிறார். மேலும், ஒசாமாவுக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்கவும் முடிவு செய்தார் தாகிர்.

இதையடுத்து, முகமது ஒசாமா, தன் 29 வயதான மனைவியிடம் மும்முறை 'தலாக்' கூறி கடந்த வியாழக்கிழமை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியிருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண், ஷாஜகானாபாத் காவல் நிலையத்தில் தன் கணவர் மீதும், மாமனார் மீதும் புகார் அளித்தார்.

29 வயது பெண்ணின் புகாரின் அடிப்படையில், முகமது ஒசாமா, அவருடைய தந்தை முகமது தாகிர் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் திருமண உரிமைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் ஷாஜகானாபாத் காவல்துறையினர். இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

சமீபத்தில், மகாராஷ்டிராவில் 3 வயது பெண் குழந்தையோடு வசித்துவந்த 31 வயதான மனைவிக்குத் தொலைபேசியில் முத்தலாக் சொன்ன கணவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு