Published:Updated:

`ரவுடிகள் மிரட்டலால் உதவி செய்யத்தான் வந்தார் எஸ்.ஐ!' -கணவர் புகாரால் கொதிக்கும் மனைவி

நர்மதா
நர்மதா

வெளிநாட்டிலிருந்து நர்மதாவுக்கு போன் செய்தால் லைன் பிஸியாகவே இருக்கும். சில நேரங்களில் என் போனையும் எடுக்க மாட்டார். இதுகுறித்து கேட்டபோதுதான் எனக்கும் நர்மதாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

சென்னை அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், `நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிவருகிறேன். 14.2019-ல் சென்னை வந்தேன். என் மனைவியின் பெயர் நர்மதா. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் மனைவிக்கும் திருநின்றவூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ராஜேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் உள்ளது. அதைக் கண்டித்ததால் எனக்கும் என் சகோதரி குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வருகிறது.

ஜனார்த்தனன்
ஜனார்த்தனன்

சில தினங்களுக்கு முன் என் குழந்தைகளைப் பார்க்கச் சென்றேன். அப்போது, ராஜேஷ், நர்மதா ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டித்தபோது ராஜேஷ் என்னைத் தாக்கினார். இதுதொடர்பாக போலீஸார் என்னிடமும் ராஜேஷிடமும் விசாரித்தனர். எனவே, என்னைத் தாக்கிய ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஜனார்த்தனிடம் பேசினோம். ``நான் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ படித்துள்ளேன். கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றிவருகிறேன். இந்தச் சமயத்தில் என் மனைவி நர்மதாவுக்கும் எஸ்.ஐ. ராஜேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து நர்மதாவுக்கு போன் செய்தால் லைன் பிஸியாகவே இருக்கும். சில நேரங்களில் என் போனையும் எடுக்க மாட்டார். இதுகுறித்து கேட்டபோதுதான் எனக்கும் நர்மதாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

வெளிநாட்டில் நான் சம்பாதித்த பணத்தில் ஒரு நிறுவனத்தை தொடங்கினேன். அந்த நிறுவனத்தை நர்மதா கவனித்துவருகிறார். மேலும், என் மனைவியின் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் என் 2 குழந்தைகளின் பெயரில் லட்சக்கணக்கான மதிப்பில் உள்ள சொத்தை எழுதி வைத்தேன். அந்தச் சொத்துகளை எழுதிவைத்த பிறகுதான் எல்லா உண்மைகளும் எனக்குத் தெரிந்தது. மனைவி மீதும் ராஜேஷ் மீதும் நான் சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என்றார்.

நர்மதா
நர்மதா

ஜனார்த்தனன் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நம்மிடம் விளக்கம் கொடுத்த நர்மதா, ``எனக்கும் ஜனார்த்தனனுக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப்பிறகுதான் ஜனார்த்தனனுக்கு சூதாடும் பழக்கம் இருப்பது எனக்குத் தெரிந்தது. பல லட்சம் ரூபாயை அதில் இழந்தார். அந்த இழப்பை என் பெற்றோர், தங்களின் சொத்துகளை விற்று சரிசெய்தனர். வெளிநாட்டில் அவர் சம்பாதித்த பணத்தில் குழந்தைகளின் பெயரில் சுயநினைவோடு சொத்தை எழுதிவைத்தார். அந்தச் சொத்தை நான் வற்புறுத்தி வாங்கவில்லை.

ஜனார்த்தனனின் சகோதரி, கட்சியில் உள்ளார். அவர் கொடுத்த புகாரின்பேரில் என் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு சொல்ல முடியாத தொல்லைகளையும் அந்தத் தரப்பினர் எனக்குக் கொடுத்தனர். கே.கே.நகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ராஜேஷ் பணியாற்றியபோது ரவுடிகள் என்னை மிரட்டினர். அந்த வழக்கின்போதுதான் எனக்கு ராஜேஷ் அறிமுகமாகினார்.

அதன்பிறகு எனக்கு அவர் சட்டப்படி உதவி செய்துள்ளார். ஆனால், அவரையும் என்னையும் ஜனார்த்தனன் தவறாகப் பேசி அவமானப்படுத்திவருகிறார். எனக்கு யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்களை ஜனார்த்தனன் அவமானப்படுத்தினார். அதனால் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். ஆனால் என்னைக் காப்பாற்றிவிட்டனர்.

கமிஷனர் அலுவலகத்தில் என்னையும் எஸ்.ஐ. ராஜேஷையும் குறிப்பிட்டு புகார் கொடுத்துள்ளார். 2 குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் நான் அவமானத்தை சந்தித்துவருகிறேன்
நர்மதா

என்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அடித்து துன்புறுத்தினார். அதுதொடர்பான புகார் மனித உரிமை ஆணையத்தில் உள்ளது. தொடர்ந்து ஜனார்த்தனன் எனக்கு தொல்லை கொடுத்ததால் மனவேதனையடைந்த நான், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சமயத்தில்தான் கமிஷனர் அலுவலகத்தில் என்னையும் எஸ்.ஐ. ராஜேஷையும் குறிப்பிட்டு புகார் கொடுத்துள்ளார். 2 குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் நான் அவமானத்தை சந்தித்துவருகிறேன்" என்றார்.

சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷிடம் பேசினோம். ``என் மீது ஜனார்த்தனன் கொடுத்த புகார் பொய்யானது. பல தடவை என் மீதும் நர்மதா மீதும் புகார் கொடுத்துள்ளார். எதையுமே விசாரிக்காமல் செய்திகள் வெளியாகும்போது மனவேதனையாக இருக்கிறது. சட்டப்படி இந்தப் புகாரை எதிர்கொள்வேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு