Published:Updated:

மதுரை: `அவ மட்டும் எனக்கு கிடைச்சா போதும்!’ - மனைவியை, அவரின் பெற்றோரே கடத்திச் சென்றதாக வழக்கு

காரில் பெண்ணைக் கடத்திச் செல்லும் காட்சி
காரில் பெண்ணைக் கடத்திச் செல்லும் காட்சி

`நானும் கோபிகாவும் ஒரே சமூகம். இருந்தாலும் வெவ்வேறு பிரிவு என்பதாலும், எங்கிட்ட பணங்காசு இல்லேன்றதாலயும் எங்களைப் பிரிக்க பார்க்குறாங்க. எனக்கு கோபிகாவோட சொத்து பத்தெல்லாம் வேணாம். அவ மட்டும் எனக்கு கிடைச்சா போதும்.’

மதுரை, திருமோகூர் பகுதியைச் சேர்ந்த மணிராஜா என்பவர் தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட தன் மனைவி கோபிகாவை மீட்டுத்தரக் கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்து, அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிய நிலையில், நீதிபதிகள் கல்யாணசுந்தரம் இளங்கோவன் அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ``அவரை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு தொடர்பாக மதுரை எஸ்.பி., ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 15.02.2021 அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மதுரை உயர் நிதிமன்றக் கிளை
மதுரை உயர் நிதிமன்றக் கிளை

இந்தநிலையில் இது குறித்து மணிராஜாவிடம் பேசினோம். ``ஒத்தக்கடை திருமோகூர்தான் என்னுடைய ஊர். இலங்கிப்பட்டியைச் சேர்ந்த கோபிகாவும் நானும் கடந்த சில வருடங்களாக நட்பாகப் பழகினோம். எங்களுக்குள் புரிதல் ஏற்பட எங்களின் நட்பு காதலானது. கோபிகா வழக்கறிஞருக்குப் படிப்பதால், படித்து முடித்த பின்னர் முறைப்படி திருமணம் செய்துகொள்வோம் என இருவரும் முடிவெடுத்தோம்.

இந்தச் சமயத்தில் அவங்க வீட்டில் எங்கள் பழக்கம் தெரிந்து கோபிகாவை அடித்துக் கொடுமை செய்திருக்கிறார்கள். சித்ரவதையைத் தாங்க முடியாம, என்னை சீக்கிரமா கூட்டிட்டு போக சொல்லிருச்சு. கோபிகாவின் நிலைமை புரிஞ்சு கோயில்லவெச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவங்க வீட்டுக்கு பயந்து தலைமறைவா இருந்தோம். என் ஃபிரெண்டுக, சொந்தக்காரங்கனு எல்லாரையும் போலீஸ் மிரட்டி, நாங்க இருக்கற இடத்தைக் கண்டுபிடிச்சாங்க. ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷன்ல பேச்சுவார்த்தை நடத்தின போலீஸ் கோபிகாவை அவங்க அப்பாகூட போகச் சொன்னாங்க. கோபிகா தைரியமா நின்னதால நாங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டோம். கோபிகாவின் பேருல இருக்குற சொத்தை அவங்க அப்பா பேருக்கு மாத்தணும்னு கேட்டுக்கிட்டதால மறுபடியும் போலீஸ் கூட போனோம்.

பெண்ணைக் கடத்தும் காட்சி
பெண்ணைக் கடத்தும் காட்சி

ரெஜிஸ்ட்ரர் ஆபீஸுக்கு வந்தபோது அவங்க அம்மா, அப்பானு ஏழு எட்டு பேரு இருந்தாங்க. ஆனா அதுக்கப்புறம் மறைஞ்சு இருந்த 20 பேர் என்னை, எங்க அக்காவை எல்லாரையும் அடிச்சுட்டு கோபிகாவை கார்ல தூக்கிட்டுப் போயிட்டாங்க. என்ன நடத்தாலும் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிக் கூட்டிட்டுப்போன கவிதாங்கிற பெண் போலீஸால எதுவும் பண்ண முடியலை. நடந்த சம்பவத்தைச் சொல்லி ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இப்போ நீதிமன்றத்தை நாடியிருக்கேன். நானும் கோபிகாவும் ஒரே சமூகம். இருந்தாலும் வெவ்வேறு பிரிவு என்பதாலும், எங்கிட்ட பணங்காசு இல்லேன்றதாலயும் எங்களைப் பிரிக்கப் பார்க்குறாங்க. எனக்கு கோபிகாவோட சொத்து பத்தெல்லாம் வேணாம். அவ மட்டும் எனக்கு கிடைச்சா போதும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு