புதுச்சேரி, பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, பச்சைவாழி என்ற மனைவியும், 7 வயதில் லட்சுமி தேவி என்ற மகளும், 3 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்தனர். தியாகராஜன் குடும்பத்துடன் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை சுமார் 9:45 மணியளவில் தன் மாமியாருக்கு போன்செய்த தியாகராஜன், குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார். அதனடிப்படையில் தியாகராஜனின் மாமியார், உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். அப்போது வீட்டினுள் பச்சைவாழியும் அவர் குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கின்றனர். அதேபோல தியாகராஜனும் தூக்கில் தொங்கியிருக்கிறார்.

அதனைப் பார்த்த அவர்கள் கதறி துடித்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார், நான்கு பேரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய அனுப்பி வைத்தனர். வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்த தியாகராஜன், ஆட்டோ ஓட்டும் பணிக்கு போகாமல் இருந்து வந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேபோல எலக்ட்ரீஷியன் வேலைகளுக்கும் சென்று வந்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``கடன் சுமை காரணமாக மனைவி, குழந்தைகள் இருவரையும் கழுத்தை நெறித்து கொலைசெய்துவிட்டு தியாகராஜன் தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்” என்றனர்.