Published:Updated:

`வேலைக்குப் போகச் சொல்லி சத்தம் போட்டாள்!'- திருச்சி கர்ப்பிணிப் பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்

கமல்காந்த்
கமல்காந்த்

``வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்த என்னை, வேலைக்குப் போகச் சொல்லி வற்புறுத்தினாள். அதனால் ஏற்பட்ட தகராறில் இப்படி நடந்துவிட்டது" என சிங்கப்பூர் பொறியாளர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருக்குக் கண்ணம்மா என்கிற மனைவியும் ஜீவிதா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்துள்ள புள்ளம்பாடி பகுதிக்கு தொழில் காரணமாகத் தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். தன் ஒரே மகளான ஜீவிதாவை பி.இ கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். தொடர்ந்து, தன் மகளுக்கு நல்ல வரன் தேடி அலைந்தார். அந்தவகையில், திருச்சி மாவட்டம், முசிறி, பார்வதிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ் என்பவரின் மகன் கமல்காந்த் என்பவர், சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றுவதாகவும் அவரின் பெற்றோர் பெண் தேடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சடலமாக ஜீவிதா
சடலமாக ஜீவிதா

அதையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்தநி்லையில் திருமணத்தின்போது, 80 சவரன் தங்க நகைகளும் ஒரு சொகுசுக் காரும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்காகச் சிங்கப்பூரில் இருந்து வந்ததாகக் கூறப்பட்ட கமல்காந்த், திருமணமாகி 7 மாதங்கள் ஆகியும் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜீவிதா ஒன்றரை மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார். தொடர்ந்து, கணவரை வேலைக்குப் போகச் சொல்லி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, நேற்று காலை ஜீவிதாவுக்கும் அவரின் கணவர் கமல்காந்துக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில், ஆத்திரமடைந்த கணவர் கமல்காந்த் தன் மனைவியை அடித்து உதைத்துள்ளார். திடீரென ஜீவிதாவின் அலறல் சத்தம் கேட்டு கமல்காந்தின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தார்கள். அப்போது, கமல்காந்த் கையில் ரத்தம் வழிந்தபடி வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தார். அவரின் இடதுகை நரம்புகள் அறுபட்ட நிலையில் ரத்தம் பீரிட்டது.

கமல்காந்த்துடன் ஜீவிதா
கமல்காந்த்துடன் ஜீவிதா

பதறிய அக்கம்பக்கத்தினர் படுக்கை அறைக்குச்சென்று பார்த்தபோது ஜீவிதா கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். தொடர்ந்து காயத்துடன் இருந்த கமல்காந்த், முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர், உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

புகார் கொடுக்க வந்தப் பெண்ணுடன் குடும்பம்.. நள்ளிரவில் சிக்கிய திருச்சி காவலர்!

தகவலறிந்த முசிறி டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீவிதாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து கமல்காந்த்திடம் நடத்திய விசாரணையில் அவர், ``திருமணத்துக்காகச் சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வந்த நான் அதன்பிறகு எங்கேயும் வேலைக்குப் போகவில்லை. இதனால், கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்தேன். ஆனால், ஜீவிதா வேலைக்குப் போகச் சொல்லி தொந்தரவு செய்தார். ஆனால், எனக்கு வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. இதன்காரணமாகவே எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இன்று காலையும் வேலைக்குப் போகச் சொல்லி என்னிடம் ஜீவிதா சத்தம் போட்டார். அதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் கோபமடைந்த நான் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அவளின் கழுத்தை அறுத்துவிட்டேன். அதைப் பார்த்தபடியே எனது கையையும் அறுத்துக்கொண்டேன்" என்றாராம்.

கொலை முயற்சி
கொலை முயற்சி

மகளுக்கு நேர்ந்த கொடூரத்தால் கதறியழுத பெற்றோர்,``80 சவரன் நகையும் ஒரு காரும் வரதட்சணையாகக் கொடுத்தோம். இவ்வளவு சீர்வரிசை செய்தும் என் மகளை அநியாயமாகக் கொலை செய்துவிட்டானே பாவி" எனக் கண்ணீர் வடித்தனர். மேலும் அவர்கள், `வரதட்சணைக் கேட்டு கமல்காந்த் மற்றும் அவரது குடும்பத்தார் பிரச்னை செய்துவந்தனர். இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும்' என முசிறி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.

ஆனால் முசிறி போலீஸாரோ, புகார் கொடுத்தவர்களிடம் `வரதட்சணை என்று குறிப்பிட வேண்டாம்' எனக் கூறிவிட்டனர். திருமணம் ஆகி 7 மாதங்களில் கொலை நடந்துள்ளது. இது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும், போலீஸார் கேட்கவில்லை. இதன் காரணமாக நேற்று மாலைவரை பிரேதப் பரிசோதனை நடைபெறவில்லை.

போலீஸாரின் செயலால் கொதித்த ஜீவிதாவின் பெற்றோர், கொலைக்கான காரணத்தை போலீஸார் மறைப்பதாகவும் வரதட்சணை மரணம் என்கிற கோணத்தில் வழக்கு விசாரணையை நடத்த மறுக்கிறார்கள் என்றும், கமல்காந்தின் தந்தை வழக்கறிஞராக இருப்பதாகவும், அதன்காரணமாக போலீஸார் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

`தந்தையின் ஆலோசனையின் பேரில்தான், ஜீவிதாவைக் கொலைசெய்த கமல்காந்த் வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக கையை அறுத்துக்கொண்டு நாடகமாடுகிறார்' என்றும் அதிர்ச்சிப் புகார் தெரிவித்துள்ளனர்.

ஜீவிதாவைக் கொலைசெய்த கமல்காந்த், வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக கையை அறுத்துக்கொண்டு நாடகமாடுகிறார்.
பாதிக்கப்பட்ட பெற்றோர்

கமல்காந்தின் பெற்றோரோ, ``நடந்த கொலைக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஜீவிதாவைக் கொலை செய்யும் அளவுக்குப் போவான் என எங்களுக்குத் தெரியாது. இந்தளவுக்குப் போன அவனை எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டோம்" என்கின்றனர் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு