Published:Updated:

`விரும்பித்தான் கல்யாணம் பண்ணினேன்; அவள் கேட்கவில்லை!' - மனைவியைக் கொன்று வீசிய கணவன் வாக்குமூலம்

குருபிரசாத்

பொள்ளாச்சி அருகே மனைவியைக் கொன்று சாக்கில் கட்டி கிணற்றில் வீசிவிட்டு காணவில்லை என நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.

dead body
dead body

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆர்.பொன்னாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல் (32). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கெளசல்யாவுக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு அபிராமி என்ற 7 வயதுக் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மனைவி கெளசல்யா (25) இடையே, கடந்த சில நாள்களாகவே குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன் மனைவியைக் காணவில்லை என்று பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 7-ம் தேதி சக்திவேல் புகார் அளித்தார்.

gowsalya dead body
gowsalya dead body

இந்தப் புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து கெளசல்யாவை தேடி வந்தனர். இதுகுறித்து, அப்பகுதி மக்களிடையே விசாரணை செய்தபோது, கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததும், அடிக்கடி இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுவதும் தெரியவந்தது. ஆனால், போலீஸாருக்கு பெரிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. கெளசல்யா மற்றும் சக்திவேல் செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, கணவன் சக்திவேல் மீது சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர. அப்போது, மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரைக் கொன்று சாக்கில் கட்டி கிணற்றில் வீசியதாக, சக்திவேல் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கிணற்றில் அழுகிய நிலையில் கெளசல்யா உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்திவேலை போலீஸார் கைது செய்தனர்.

Dead body
Dead body

காவல்துறையினரிடம் சக்திவேல் அளித்த வாக்குமூலத்தில், "நான் தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறேன். பணி இடத்தில் வைத்துதான் கெளசல்யாவை பார்த்து, விரும்பி திருமணம் செய்துகொண்டேன். ஆனால், நாளடைவில் என் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

கடந்த, ஜூலை 26-ம் தேதி கடுமையான வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. என் மனைவி ஓட்டம் பிடித்தார். அப்போது, நான் பெரிய கல்லை எடுத்து வீசினேன். அந்தக் கல் என் மனைவியின் தலையில் பட்டு, அவர் கீழே விழுந்தார். பிறகு, அவரின் கழுத்தை நெரித்தேன். இதில், என் மனைவி உயிரிழந்துவிட்டார். விஷயம் வெளியில் தெரியக்கூடாது என்பதால், மனைவியின் உடலை சாக்கில் கட்டி, கிணற்றில் வீசிவிட்டேன். என் மனைவியின் குடும்பத்தினர் கேட்டபோது, என் மனைவியின் நடத்தை குறித்து திட்டிவிட்டு, நானும் அவரை தேடுவதுபோல அழுது நாடகமாடினேன். ஆனால், என் மனைவியின் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தால் போலீஸில் புகார் அளித்தேன். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றமே கொலைக்குக் காரணம்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

sakthivel
sakthivel

கொலை செய்த நாளிலிருந்து, கெளசல்யா மற்றும் தனது செல்போன்களை சக்திவேல் ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார். போலீஸாரிடம், போன் பிரச்னை என்று கூறினார். ஆனால், சக்திவேல் அவ்வப்போது செல்போனை ஆன் செய்தது, போலீஸார் ட்ராக் செய்தபோது தெரியவந்தது. அதுவே, சக்திவேல் மீது போலீஸாருக்கு சந்தேகம் அதிகரிக்கக் காரணமாகிவிட்டது.