Published:Updated:

புதுச்சேரி: `இந்தாங்க சார் கத்தி..!’ - சந்தேகத்தால் மனைவியைக் கொன்று சரணடைந்த கணவர்

விஜயன்
விஜயன்

மனைவி மீதான சந்தேகத்தால், அவரின் கழுத்து அறுத்துக் கொலை செய்த கணவர், கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி, முதலியார்பேட்டை சாலை ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தின் முன்புறம் ரத்தக் கறை படிந்திருந்த கத்தியைச் சொருகிக்கொண்டு சென்ற ஒருவரைப் பார்த்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தெறித்து ஓடினார்கள். ஆனால், அமைதியாக முதலியார்ப்பேட்டை காவல் நிலையத்துக்குள் வாகனத்தைச் செலுத்திய அந்த நபர், `இந்தாங்க சார் கத்தி. என் பொண்டாட்டியைக் கொலை பண்ணிட்டேன்’ என்று கூற, அதிர்ந்து போயிருக்கின்றனர் அங்கிருந்த காவலர்கள்.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

புதுச்சேரி, முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயன் (58) அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் மனைவி சாந்தி (52), தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றியவர். இந்தத் தம்பதியரின் மகளும் மகனும் கல்லூரியில் படித்துவருகின்றனர். கடந்த சில மாதங்களாக மனைவிக்கு வரும் செல்போன் அழைப்புகளால் சந்தேகமடைந்த விஜயன், சாந்தியிடம் அது குறித்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. நேற்று காலையும் அது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மனைவியின் கை மற்றும் கால்களை துணியால் இறுக்கமாகக் கட்டி, வீட்டிலிருந்த கத்தியால் அவரது கழுத்தை வெட்டி, அறுத்திருக்கிறார் விஜயன். அதில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்திருக்கிறார் சாந்தி.

சாந்தி
சாந்தி

அதன் பிறகுதான் அந்தக் கத்தியை தனது இருசக்கர வாகனத்தின் முன்புறம் வைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்திருக்கிறார் விஜயன். அதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், விஜயாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதலியார்பேட்டை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவிடம் பேசினோம். ``மனைவிக்கு வரும் செல்போன் அழைப்புகள்மீது விஜயனுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் `உன்னைக் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டிவந்திருக்கிறார்.

கொலை
கொலை
Representational Image

அதற்கு சாந்தியும், `தாரளமா கொலை பண்ணிக்கங்க’ என்று கூறி வந்திருக்கிறார். அப்போதெல்லாம் மனைவியின் கை மற்றும் கால்களைக் கட்டி மிரட்டுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் விஜயன். சமீபத்தில் மனைவியின் பிறந்தநாளுக்கு வந்த செல்போன் அழைப்புகள் குறித்து இன்று மீண்டும் கேட்ட விஜயன், `கொலை செய்துவிடுவேன்’ என்று கூறி சாந்தியின் கையையும் காலையும் கட்டிப் போட்டுவிட்டு கத்தியால் வெட்டியும், அறுத்தும் கொலை செய்திருக்கிறார். தற்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை செய்துவருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு