Published:Updated:

குமரி: நடத்தையில் சந்தேகம்... மனைவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த கணவன்!

கொலை
கொலை ( Representational Image )

ராஜசேகர் தன் மனைவியிடம், `இனி நீ வேலைக்குச் செல்லக் கூடாது’ என்று கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதுவே கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (39). தென்னை மரம் ஏறும் தொழில் செய்துவந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கம் (30) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். ராஜசேகர் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. வீட்டுக்கு வாடகை கொடுக்கவே சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது. கணவரின் வருமானம் கைகொடுக்காததால் தங்கம் அருகிலுள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்குச் சென்ரிருக்கிறார். இதனால் கொஞ்சம் நாள் பிரச்னை இல்லாமல் இருந்தது. இதற்கிடையில் மனைவியின் நடத்தைமீது சந்தேகமடைந்த ராஜசேகர், தினமும் மது போதையில் மனைவி தங்கத்தை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார். தங்கம் வழக்கம்போல நேற்று முந்திரி ஆலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியிருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட ராஜசேகர்
தற்கொலை செய்துகொண்ட ராஜசேகர்

அப்போது வீட்டிலிருந்த ராஜசேகர் தன் மனைவியிடம், `இனி நீ வேலைக்குச் செல்லக் கூடாது’ எனக் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இரவு இரண்டு குழந்தைகளையும் தனி அறையில் தூங்கவைத்திருக்கிறார் ராஜசேகர். பின்னர் மற்றொரு அறையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் அறைக்குச் சென்றிருக்கிறார். தேங்காய் வெட்டப் பயன்படுத்தும் அரிவாளால் மனைவி தங்கத்தின் கழுத்தில் வெட்டியிருக்கிறார். இதில் தங்கம் ரத்த வெள்ளத்தில் கட்டிலிலேயே பிணமானார்.

இதையடுத்து வீட்டைவிட்டு வெளியே வந்த ராஜசேகர், வராந்தாவில் நைலான் கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் விழித்துப் பார்த்தபோது தாய், தந்தையின் உடலைப் பார்த்துக் கதறி அழுதிருக்கிறார்கள். பின்னர் இது பற்றி இரணியல் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போலீஸார் அங்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளத்திலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை செய்யப்பட்ட தங்கம்
கொலை செய்யப்பட்ட தங்கம்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால், இந்தக் கொலை நடந்திருப்பதாக அந்தப் பகுதியினர் கூறுகின்றனர். இருப்பினும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். மனைவி மீது சந்தேகம் எழுந்ததால் நடந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவத்தால், அந்தத் தம்பதியரின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு