Published:Updated:

`குறட்டைவிட்டு நிம்மதியா தூங்குறியா..!’ - கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

Representational Image
Representational Image

குறட்டைச் சத்தத்தால் ஆத்திரமடைந்து மனைவியின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற கணவன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், ஜோலார்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த குடியானக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (40). கட்டுமானத் தொழிலாளி. இவர் மனைவி விமலா (31). இரண்டு பேரும் ஏற்கெனவே வெவ்வேறு நபர்களை முதல் திருமணம் செய்து விவகாரத்து பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் சங்கரும் விமலாவும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் மதுஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள்.

விமலாவின் சடலம்
விமலாவின் சடலம்

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சங்கருக்கும் விமலாவுக்கும் அடிக்கடித் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. நேற்று காலை நீண்ட நேரமாகியும் இரண்டு பேரும் வீட்டிலிருந்து வெளியில் வரவில்லை. அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது, விமலா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். சடலத்துக்கு அருகில் சங்கரும் ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். குழந்தை அழுது கொண்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜோலார்பேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து விமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், சங்கரையும் மீட்டு சிகிச்சைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்குச் சுயநினைவு திரும்பிய பிறகு போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

படுகாயங்களுடன் சங்கர்
படுகாயங்களுடன் சங்கர்

முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு சங்கரும் விமலாவும் வழக்கம்போல் தூங்கச் சென்றனர். அப்போது, தன் ஆசைக்கு இணங்குமாறு மனைவியை சங்கர் வற்புறுத்தியுள்ளார். இதற்கு விமலா மறுப்பு தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அந்த நேரத்திலேயே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பின்னர், விமலா பேசாமல் தூங்க ஆரம்பித்தார். சங்கர் கோபத்துடன் அருகில் படுத்திருந்தார்.

நள்ளிரவு கடந்து அதிகாலை வேளையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த விமலா குறட்டைவிட்டுள்ளார். அப்போது விழித்துக்கொண்டிருந்த சங்கர், குறட்டைச் சத்தத்தால் தன்னுடைய தூக்கம் களைந்துவிட்டதாக ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். பின்னர், வீட்டு வெளியில் கிடந்த பாறாங்கல்லைத் தூக்கி வந்து மனைவியின் முகத்தில் போட்டுள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் விமலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

சங்கர் மற்றும் விமலா
சங்கர் மற்றும் விமலா

பின்னர், போலீஸில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் சங்கரும் அதே கல்லில் தன்னுடைய தலையையும் வேகமாக முட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சங்கர் மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு