திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்தவர் கருப்பையா (39). இவர் கரூரில் உள்ள தனியார் ஜவுளி எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அதேபகுதியைச் சேர்ந்த கற்பகம் (30) என்பவரை காதலித்தார். இதையடுத்து இருவீட்டாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சொந்த ஊரான வடமதுரைக்கு வந்து இருவரும் சேர்ந்து தையல் மெஷின் வாங்கி வடமதுரை பஸ் ஸ்டாண்ட் அருகே பிளாட்பாரத்தில் தையல் தொழிலில் ஈடுபட்டுவந்தனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தொடக்கத்தில் கணவருக்கு உதவியாக கற்பகமும் தையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் அவரால் தையல் தொழிலுக்கு கணவருடன் செல்லமுடியவில்லை. ஏற்கெனவே குடும்பம் வறுமையில் இருந்த சூழலில், கருப்பையா குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். தினந்தோறும் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் தான் கணவனை குடிபோதையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ஈரோட்டில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று குடிக்கமாட்டேன் என சத்தியம் வாங்கிக் கொண்டு கையில் கயிறுகட்டிவிட்டுள்ளார். அன்றைய தினம் இரவு கருப்பையா வீட்டில் சாப்பிடாமல் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். கற்பகமும், மூன்று மகள்களும் அப்பாவை சாப்பிட வற்புறுத்தியும் சாப்பிடமறுத்துள்ளார். இதையடுத்து அனைவரும் தூங்கிவிட்டனர்.

சிறிதுநேரத்தில் அம்மா கதறித் துடிக்கும் சத்தம் கேட்டு 3 குழந்தைகளும் எழுந்து லைட்டைப் போட்டு பார்த்துள்ளனர். அப்போது அம்மா கழுத்தில் துணி வெட்டும் கத்தரிக்கோலால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகே வசிக்கும் அவர்களது தாத்தா, பாட்டி இருவரும் வந்து குழந்தைகளை அரவணைத்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது கருப்பையா, `என்னை குடிக்கவிடாமல் தடுத்தாள். அந்த ஆத்திரத்தில் தான் கொலை செய்தேன்’ எனக் கூறிவிட்டு தனது வீட்டின் திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுக்க, வடமதுரை போலீஸார் விரைந்து கற்பகம் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்பையாவைக் கைது செய்தனர்.
குடிபோதைக்கு அடிமையான கணவனை திருத்த நினைத்த மனைவியை கத்திரிக்கோலால் குத்தி கொலையான சம்பவம் வடமதுரை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து வடமதுரை போலீஸாரிடம் விசாரிதோம். ``கருப்பையா நல்ல டெய்லர் எனப் பெயரெடுத்தவர். குடிக்காமல் இருக்கும் போது அனைவரிடமும் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார். ஆனால் குடித்துவிட்டால் யாரையும் மதிக்காமல் நடந்து கொள்வார். மிகவும் சொற்பமான ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாத நிலையில் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் குடித்து அழிக்கிறார் என அவரின் மனைவி கண்டிப்புடன் இருந்துள்ளார்.

வீட்டு சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் முடிந்து வந்தாலும் கூட கற்பகத்தை யாரும் எவ்வித குறையும் கூறவில்லை. அவர் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவராக இருந்துள்ளார். வடமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். கணவனின் குடிப்பழக்கம் அவரை கொலையாளியாக மாற்றியது மட்டுமில்லாமல் குழந்தைகளையும் தவிக்கவிட வைத்துவிட்டது” என்றனர்.