Published:Updated:

`பள்ளி ரீ-யூனியனில் சந்திப்பு; தோழிக்காக கொல்லப்பட்ட மனைவி!’- கேரளா முதல் நெல்லை வரை பயணித்த சடலம்

நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் வித்யாவின் மொபைல் போனை வீசியிருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் உடலை வீசிச் சென்ற பிரேம்குமார், சுனிதா
திருநெல்வேலியில் உடலை வீசிச் சென்ற பிரேம்குமார், சுனிதா

கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு மூவாற்றுப்புழா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துவந்தார். அப்போது, ஹோட்டலுக்கு வந்த உறவினர் ஒருவரைக் காணவில்லை என வித்யா என்ற பெண் போனில் பிரேம்குமாரிடம் பேசியிருக்கிறார்.

அதில் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்தது. இதைத்தொடர்ந்து பிரேம்குமாரும் வித்யாவும் திருமணம் செய்துகொண்டனர். பல இடங்களில் வாடகைக்கு வசித்துவந்த நிலையில், கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கொச்சி உதயம்பேரூருக்கு இடம்பெயர்ந்தனர். இந்தநிலையில், கடந்த செப்டம்பர் 23-ம் தேதி உதயம்பேரூர் காவல்நிலையத்தில் தன் மனைவி வித்யாவைக் காணவில்லை என பிரேம்குமார் புகார் அளித்தார்.

பிரேம்குமார் - வித்யா
பிரேம்குமார் - வித்யா

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணைக்கு அழைத்தால் வராமல் பிரேம்குமார் டிமிக்கி கொடுத்திருக்கிறார். மேலும், முன்ஜாமீன் பெற முயன்றதுடன், போலீஸார் தன்னை தொந்தரவு செய்வதாகவும் உயர் அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் வழக்கை வேறுவிதமாக விசாரிக்கத் தொடங்கினர். இதையடுத்து பிரேம்குமார் மற்றும் அவரின் தோழி சுனிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ``பிரேம்குமார் திருவனந்தபுரத்தில் ஒரு ஸ்கூலில் படித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பள்ளியில் படித்தவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் தன்னுடன் படித்த சுனிதாவை சந்தித்திருக்கிறார். இருவரும் சந்தித்தபோது அவர்களுக்குள் நட்பு அதிகரித்து காதலாக மாறியுள்ளது. சுனிதா கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஹைதராபாத்தில் வசித்துவந்தார். இந்தநிலையில், திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவமனையில் நர்சிங் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தார் சுனிதா. இதனையடுத்து, அவருக்கு பிரேம்குமாருடனான நெருக்கம் அதிகரித்தது.

கொலை
கொலை

இருவரும் சேர்ந்து வாழ முடிவுசெய்து அதற்கு இடையூறாக இருக்கும் வித்யாவைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். ஆயுர்வேத சிகிச்சைக்காக வித்யாவை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ரிசாட்டில் தங்கவைத்திருக்கிறார் பிரேம்குமார். பின்னர் சுனிதாவுடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இரவு வித்யாவுக்கு மது கொடுத்திருக்கிறார். மயக்க நிலையில் இருந்த வித்யாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்திருக்கிறார். மறுநாள் காலையில் சுனிதா வழக்கம்போல மருத்துவமனைக்குச் சென்றார்.

திருநெல்வேலி போலீஸார் எடுத்துவைத்த புகைப்படம் மூலம் அது வித்யாவின் உடல்தான் என அடையாளம் கண்டுகொண்டோம்.
கேரள போலீஸார்

மதியம் பிரேம்குமார் மருத்துவமனைக்குச் சென்று சுனிதாவை அழைத்துவந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து வித்யாவின் உடலை காரின் பின்சீட்டில் அமரவைத்தனர். சுனிதா பின்சீட்டில் அமர்ந்து வித்யாவின் தோளில் கையைப் போட்டு உடல் சரிந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். அங்கிருந்து திருநெல்வேலிக்கு வந்து ஹைவேயில் வித்யாவின் உடலை வீசிச் சென்றிருக்கிறார்கள்.

பின்னர் வள்ளியூர் ரயில் நிலையத்துக்குச் சென்று நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் வித்யாவின் மொபைல் போனை வீசியிருக்கிறார்கள். நாங்கள் மொபைல்போன் சிக்னலைப் பார்த்தபோது அது பீகார் எனக் காட்டியது. எங்கள் விசாரணையைக் குழப்புவதற்காக இதுபோன்று செய்திருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் உடலை வீசிச் சென்ற பிரேம்குமார், சுனிதா
திருநெல்வேலியில் உடலை வீசிச் சென்ற பிரேம்குமார், சுனிதா

வித்யா இதற்கு முன்பும் சிலமுறை காணாமல் போனதாகவும், பின்னர் திரும்ப வந்ததும் தெரியவந்தது. அதை பயன்படுத்திதான் பிரேம்குமார் மனைவியைக் காணவில்லை என நாடகம் ஆடியிருக்கிறார்.

`மனைவியைக் காணவில்லை' என புகார் அளித்தவர் எதற்காக முன்ஜாமீன் கேட்கிறார் என எங்களுக்குச் சந்தேகம் வந்தது. அதன்பிறகு முழுமையாக விசாரணை நடத்தியதில் அது கொலை எனத் தெரியவந்தது. திருநெல்வேலியில் வீசப்பட்ட உடலை நெல்லை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அந்த உடல் குறித்த தகவல் இல்லாததால் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஆதரவற்ற பிணம் எனத் தகனம் செய்துள்ளனர். அப்போது திருநெல்வேலி போலீஸார் எடுத்துவைத்த புகைப்படம் மூலம் அது வித்யாவின் உடல்தான் என அடையாளம் கண்டுகொண்டோம்".

இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.