Published:Updated:

`அதிகநேரம் போனில் பேசினாள்; ஆத்திரம் தீரவில்லை!' -சென்னைத் தொழிலதிபரை சிக்கவைத்த பிரேதப் பரிசோதனை

சென்னையில், போனில் அதிக நேரம் பேசியதால் மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொலைசெய்த சம்பவத்தில், 10 நாள்களுக்குப் பிறகு கணவர் சிக்கியுள்ளார்.

 தொழிலதிபர்  ஏழுமலை
தொழிலதிபர் ஏழுமலை

சென்னை திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை (41). இவரின் மனைவி வனிதா (32). இந்தத் தம்பதிக்கு யோகேஸ்வரன், மாதேஷ்வரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 3-ம் தேதி, வனிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக ஏழுமலை தெரிவித்தார்.

திருவொற்றியூர் வீடு
திருவொற்றியூர் வீடு

இதையடுத்து வனிதா சடலம், அவரின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கோவிலூர் கிராமத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு, வனிதாவின் தந்தை குப்புசாமி, தன் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

திருவண்ணாமலை போலீஸார் கொடுத்த தகவலின்பேரில், திருவொற்றியூர் போலீஸார் வனிதாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வனிதாவின் மரணம் குறித்து இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில், வனிதாவின் மரணம் இயற்கை அல்ல, அவரை உருட்டுக்கட்டையால் தாக்கியதால் இறந்துவிட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஏழுமலையிடம் போலீஸார் விசாரித்தபோது, வனிதாவை பூரிக்கட்டையால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மனைவியைக் கொலைசெய்த குற்றத்துக்காக ஏழுமலையை போலீஸார் கைதுசெய்தனர்.

கொலை செய்யப்பட்ட வனிதா
கொலை செய்யப்பட்ட வனிதா

வனிதாவைக் கொலை செய்ததற்கான காரணத்தை போலீஸாரிடம் கூறியிருக்கிறார் ஏழுமலை. அதில், `எனக்கும் வனிதாவுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நான் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறேன். சில மாதங்களாக வனிதாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அடிக்கடி அவர் போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அதுகுறித்துக் கேட்டபோது, எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும், வனிதா யாருடன் அதிகநேரம் போனில் பேசுகிறார் என்பதை அறிய அவரின் செல்போனை ஆய்வுசெய்தேன். அப்போது, நாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள மெக்கானிக் ஒருவருடன் அவர் அதிகநேரம் போனில் பேசியது தெரியவந்தது.

திருவொற்றியூர் காவல்நிலையம்
திருவொற்றியூர் காவல்நிலையம்

அதுகுறித்து வனிதாவிடம் விசாரித்தபோது, என்னைத் திட்டினாள் அதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் வனிதாவின் தலையில் பூரிக் கட்டையால் அடித்தேன். இதில் அவரின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, அருகில் உள்ள மருந்துகடையில் மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், காயங்கள் ஆறினாலும் அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. சம்பவத்தன்று, தலை வலிக்கிறது என்று வனிதா கூறினாள். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டாள்.

`சேர மறுத்துவிட்டான்; கொன்றுவிட்டேன்'- கல்லூரி மாணவர் கொலை வழக்கில் போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்!

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வனிதா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், உடல் நலம் சரியில்லாமல் வனிதா இறந்துவிட்டதாகக் குடும்பத்தினரிடம் கூறினேன். அவர்களும் அதை நம்பினார்கள். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையினால், நான் சிக்கிக் கொண்டேன்" எனத் தெரிவித்ததாகப் போலீஸார் கூறுகின்றனர்.