Published:Updated:

மனைவி நடத்தையில் சந்தேகம்; கழுத்தை அறுத்துக் கொலை! - திருப்பூரில் கணவர் வெறிச்செயல்

கொலை செய்யப்பட்ட நிஷா பானு
கொலை செய்யப்பட்ட நிஷா பானு

குக்கரை தலையில் அடித்து மனைவியை நிலைகுலைய வைத்தவர், அதன்பிறகு கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருக்கிறார்.

திருப்பூர் - காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது (32). தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நிஷா பானு (26) என்பவருக்கும் திருமணம் ஆகியிருக்கிறது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. நிஷா பானு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். இரண்டாவதாகத்தான் அப்துல் சமதுவைத் திருமணம் செய்திருக்கிறார். சொற்ப வருமானமாக இருந்தாலும், கணவன் - மனைவி இருவருமே மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக எப்போதுமே போன் பேசிக்கொண்டே இருப்பது என நிஷா பானுவின் நடவடிக்கை மாறியதாகச் சொல்கிறார்கள்.

மனைவி பிரிந்து சென்ற 45வது நாள்! 3 குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட தந்தை

ஆரம்பத்தில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அப்துல் சமது, ஒரு கட்டத்தில் மனைவியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். முதல் திருமணம் மற்றும் மனைவியின் நடத்தையை வைத்து அப்துல் சமது அடிக்கடி பிரச்னை செய்து வந்திருக்கிறார். இருந்தும், நிஷா பானு தொடர்ந்து செல்போனில் நண்பர்களுடன் அரட்டையடித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு அப்துல் சமது வீட்டுக்கு வந்தபோது நிஷா பானு யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். `யார்கிட்ட பேசிக்கிட்டு இருந்த, போனைக் குடு’ என அப்துல் சமது போனை பிடுங்க முற்பட, நிஷா பானு தர மறுத்துள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கோபத்தின் உச்சிக்குச் சென்ற அப்துல் சமது அருகிலிருந்த குக்கரை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.

கணவர் அப்துல் சமது உடன் நிஷா பானு
கணவர் அப்துல் சமது உடன் நிஷா பானு

தலையில் விழுந்த அடியால் நிஷா பானு சுருண்டு விழுந்திருக்கிறார். கோபம் தணியாதவராய் அருகில் இருந்த கத்தியை எடுத்த அப்துல் சமது, மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார். கோபம் குறைந்து நிலைமையை உணர்ந்ததும் நேரடியாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்திருக்கிறார். இச்சம்பவம் திருப்பூர் தெற்கு காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்டது என்பதால் அவரை போலீஸார் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், உடலைக் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

`குவைத் காதல்... இரண்டாம் திருமணம்; தலைமறைவான மனைவி?’ -தஞ்சையைப் பதறவைத்த கொலை

`மனைவின் தவறான நடவடிக்கைகளை திருத்திக் கொள்ளுமாறு பலமுறை எச்சரித்தேன். அவள் என்னைப் பொருட்டாகவே மதிக்கவில்லை. தொடர்ந்து போனில் பேசி வந்தாள். அந்தக் கோபத்தில்தான் கொலை செய்தேன்’ என போலீஸாரிடம் அப்துல்சமது கூறியிருக்கிறார். அவர்மீது, திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில்தான் கொலைக்கான வேறு காரணங்கள் ஏதாவது இருக்கின்றனவா எனத் தெரியவரும் என போலீஸார் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு