சென்னை வளசரவாக்கம், கைக்கான் குப்பம் வ.உ.சி.தெருவைச் சேர்ந்தவர் குமார் (50). இவரின் மனைவி விஜயா (36). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினமும் மது அருந்திவிட்டு வரும் குமார், மனைவி விஜயாவோடு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 3-ம் தேதி மதியம் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த குமார், திடீரென மயக்கமடைந்து இறந்து விட்டதாக அவரின் மனைவி விஜயா, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமேகலை, தேவராஜ் ஆகியோர் விசாரித்தனர். குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் குமார், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. அதனால் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீஸார், விஜயாவிடம் விசாரித்தனர். அப்போது சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த குமார், தன்னை தாக்கினார். அதனால் குமாரின் கழுத்தைப் பிடித்து நெரித்து கீழே தள்ளியதாக விஜயா தெரிவித்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீஸார் விஜயாவைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,`` குமாரும் விஜயாவும் கலப்பு திருமணம் செய்தவர்கள். குமார், எலெக்ட்ரீசியனாக வேலைப்பார்த்து வந்தார். விஜயா வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களின் பிள்ளைகள் குழந்தை நட்சத்திரமாக சீரியல்களில் நடித்து வருகின்றனர். குமாருக்கும் விஜயாவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் உள்ளது. மேலும் மதுவுக்கு குமார் அடிமையான பிறகு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் விஜயா தன்னுடைய அம்மா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

மேலும் விஜயா, சில மாதங்களாக கணவர் குமாரோடு சந்தோஷமாக வாழவில்லை. இந்தச் சூழலில்தான் சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வந்த குமார், மனைவியை ஆசையோடு நெருங்கியுள்ளார். அதற்கு விஜயா சம்மதிக்கவில்லை. மேலும் குமாரின் கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். அதில் குமார் மயக்கமடைந்ததும் விஜயா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்போது குமாரின் மரணம் குறித்து விஜயாவிடம் விசாரித்தபோது மதுவால் மயக்கமடைந்து இறந்துவிட்டதாகவே தெரிவித்தார். ஆனால் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டால் விஜயா சிக்கிக் கொண்டார். மேலும் விஜயாவின் செல்போனுக்கு இளைஞர் ஒருவர் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர் மீதும் எங்களின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது" என்றனர்.