Published:Updated:

`நீ உயிரோடு இருந்தால்தானே போனில் பேசுவே...' - கணவரின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த தோகைமலை

சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடு

ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டு, ஜவுளிக் கடைகள் எல்லாம் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டதால், கமலா மறுபடியும் வேலைக்குப் போக நினைத்திருக்கிறார்.

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், தன் மனைவியை பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவரின் கொடூரச் செயல் கண்டு, தோகைமலை பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடு
`மூணு வேளையும் முருங்கைக்கீரைதான் சாப்பாடு!’ - துயரத்தில் தவிக்கும் 70 வயது மாரியப்பன்

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் இருக்கிறது வடசேரி. இந்த ஊராட்சியில் உள்ள காவல்காரன்பட்டி காலனித் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாய கூலித்தொழிலாளி. இவரின் மனைவி, கமலா. இவர்களுக்கு, கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கிருஷ்ணமூர்த்தி சொந்தக் கிராமத்தில் விவசாய வேலைகள் பார்த்து வர, கமலா திருச்சியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார். இதனால், தொழில்ரீதியாக கமலா பலரோடு போனில் பேசுவாராம். அதைப் பார்த்து மனைவி மீது சந்தேகப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, கமலாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வீட்டில் இருந்து வந்துள்ளார் கமலா.

காவல்காரன்பட்டி
காவல்காரன்பட்டி

அப்போதும், அவர் போனில் சிலரோடு பேச, அதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி, அவரிடம் தினமும் சண்டை போட்டு வந்துள்ளதாகச் சொல்கின்றனர். இந்தநிலையில், ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டு, ஜவுளிக் கடைகள் எல்லாம் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டதால், கமலா மறுபடியும் வேலைக்குப் போக நினைத்திருக்கிறார். ஆனால், கிருஷ்ணமூர்த்தி, 'இனிமே நீ வேலைக்குப் போக வேண்டாம்' என்று தடுத்திருக்கிறார். இதனால், இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்படி ஏற்பட்ட சண்டையில் கோபமான கிருஷ்ணமூர்த்தி, 'நீ உயிரோடு இருந்தால், எனக்கு நிம்மதி இல்லை. உன் சாம்பல்கூட மிஞ்சக் கூடாது. நீ உயிரோடு இருந்தால்தானே, கண்ட ஆள்களோடு போனில் பேசுவ?' என்று கூறி, அருகில் இருந்த பெட்ரோல் கேனைத் திறந்து, அதில் இருந்த பெட்ரோலை கமலா மீது ஊற்றி, தீ வைத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் கமலா அலறியிருக்கிறார். கமலா மீது தீ வைத்தபோது, கிருஷ்ணமூர்த்தி மீதும் லேசாகத் தீ பற்றியிருக்கிறது. இதையறிந்த அக்கம்பத்தில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

தோகைமலை காவல் நிலையம்
தோகைமலை காவல் நிலையம்

பிறகு, மேல் சிகிச்சைக்காக கமலா அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த கமலா, சிகிச்சைப் பலனின்றி இறந்தார். லேசான தீக்காயங்கள் ஏற்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

இதனையடுத்து, தன் மகள் மீது வீணாக சந்தேகப்பட்டு சண்டை போட்டு, எரித்துக் கொன்றதாக கிருஷ்ணமூர்த்தி மீது, கமலாவின் தந்தை ஆறுமுகம், தோகைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மீது எழுந்த சந்தேகத்தால், அவர்மீது பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்ற கிருஷ்ணமூர்த்தியின் செயலால், தோகைமலை பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு