புதுக்கோட்டை: மது குடிப்பதை தட்டி கேட்ட மனைவி! - தீ வைத்து எரித்த கணவன் கைது

ஆத்திரமடைந்த சேகர் சமையலறையிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து வந்து மனைவியின் மீது ஊற்றி, அடுத்த கனமே சேலையில் தீயை வைத்துவிட்டு வெளியே வந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுனையக்காட்டைச் சேர்ந்தவர் சேகர்(39). இவரது மனைவி அமிர்தவல்லி. இவர்களுக்கு கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தை இல்லை. கூலித் தொழிலாளியான சேகர் கடந்த சில மாதங்களாகவே சரிவர வேலைக்குச் செல்வதில்லை என்று கூறப்படுகிறது

மாறாக தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி அமிர்தவல்லியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான் வழக்கம் போல் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்துள்ளார். இதுபற்றி மனைவி தட்டிக்கேட்க, கணவனுக்கும்-மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை நடந்துள்ளது.
ஆத்திரமடைந்த சேகர் சமையலறையிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து வந்து மனைவியின் மீது ஊற்றி, அடுத்த கனமே சேலையில் தீயை வைத்துவிட்டு வெளியே வந்துள்ளார். தீ உடல் முழுவதும் பற்றியதில் அமிர்தவல்லி அலறித் துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் தீயை அணைத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

80 சதவீதம் தீக்காயமடைந்த அமிர்தவல்லி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அமிர்தவல்லியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் சேகரை கைது செய்த அறந்தாங்கி போலீஸார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
குடிபோதையில் மனைவியை, கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.