மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே நல்லுச்சேரி கூடலூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த ஜான்சன் சத்தியசீலனின் மகன் விக்டர் வினோத்குமார் (வயது 35 ). இவரின் மனைவி புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட். இவர் சங்கரன்பந்தலிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார்.

இவர்களுக்கு மகன், மகள் என இரு பிள்ளைகள். கணவன், மனைவி இருவரும், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த ஆறு மாத காலமாகப் பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள். ஹேமா ஜூலியட், கீழப்பாதி வாய்க்கால்கரை தெருவிலுள்ள தனது தந்தை அய்யாபிள்ளை வீட்டில் வசித்துவருகிறார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் நேற்று (16.03.2022) மாலை பள்ளி முடிந்து ஹேமா ஜூலியட் பஸ்ஸில் செம்பனார்கோயில் கடைவீதிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த விக்டர் வினோத்குமார், தான் திருந்திவிட்டதாகவும், இனிமேல் எந்தப் பிரச்னையும் வராது எனவும் கூறி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கு ஹேமா ஜூலியட் மறுக்கவே விக்டர் வினோத்குமார், கடைவீதியில் பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் தனது மனைவி ஹேமா ஜூலியட்டின் கழுத்தை பிளேடால் கிழித்திருக்கிறார். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். தகவலறிந்த செம்பனார்கோயில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கணவர் விக்டர் வினோத்குமாரைக் கைதுசெய்தனர். கூட்டம் அதிகமுள்ள கடைவீதியில் குடிபோதையில் மனைவியின் கழுத்தை பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது