Published:Updated:

குமரி: காதல் திருமணம்; 20 நாளில் கருத்து வேறுபாடு! - கணவன் தற்கொலையால் விபரீத முடிவெடுத்த மனைவி

தற்கொலை செய்துகொண்ட விஷ்ணு
தற்கொலை செய்துகொண்ட விஷ்ணு

காதல் கணவன் இறந்த துக்கத்தில் ஷாலினி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஷாலினியை அவரது உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). இவர் குறும்படங்கள் எடுக்கும் கேமராமேனாகப் பணியாற்றிவந்தார். இவர் எடுக்கும் குறும்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வது இவர் வழக்கம். இந்தநிலையில் ஃபேஸ்புக் மூலம் திருப்பூரைச் சேர்ந்த ஷாலினி (22) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் பற்றிப் பேசி இருவரும் நண்பர்களாகப் பழகியிருக்கிறார்கள். பின்னர் நட்பு காதலாக மாறியிருக்கிறது. விஷ்ணுவும் ஷாலினியும் காதலிப்பது அவர்களுடைய பெற்றோருக்குத் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் விஷ்ணுவும் ஷாலினியும் கடந்த 20 நாள்களுக்கு முன்னர் திருமணம் செய்திருக்கிறார்கள்.

காதல் திருமணம் செய்த ஷாலினி - விஷ்ணு
காதல் திருமணம் செய்த ஷாலினி - விஷ்ணு

காதலிக்கும்போது மிகவும் அன்பாகவும், அனுசரணையாகவும் இருந்தவர்களுக்கு திருமணம் ஆன சில நாள்களிலேயே பிரச்னை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் மத்தியில் மனக்கசப்பு ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதமும் நடந்துவந்திருக்கிறது. மேலும், விஷ்ணுவின் குடும்பத்தினர் தன்னை விமர்சிப்பதாகவும் ஷாலினி கூறியிருக்கிறார். மாறி மாறிப் பிரச்னைகள் வந்ததால், விஷ்ணு இரவு நேரங்களில் தாமதமாக வீட்டுக்குச் செல்வதை வழக்கமாக்கியிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் பிரச்னை முற்றியது.

இந்தநிலையில் கடந்த திங்கள்கிழமை இரவும் விஷ்ணு தாமதமாக வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஷாலினி திடீரென விஷ்ணு கட்டிய தாலியைக் கழற்றியிருக்கிறார். இதனால் மனம் உடைந்த விஷ்ணு, ஆத்திரத்தில் வேகமாகத் தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டியிருக்கிறார். ஷாலினி அந்த அறைக் கதவைத் தட்டியும், பின்னர் திறக்க முயன்றும் முடியாததால் சத்தம் போட்டு உறவினர்களை அழைத்திருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட விஷ்ணு
தற்கொலை செய்துகொண்ட விஷ்ணு

உறவினர்கள் அங்கு சென்று போராடி, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கு மனைவியின் சேலையால் விஷ்ணு தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஷ்ணுவின் பெற்றோர் கோட்டார் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையில் காதல் கணவன் இறந்த துக்கத்தில் ஷாலினி தனது கழுத்தைக் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஷாலினியை அவரின் உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து கோட்டாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு