Published:Updated:

உ.பி: கர்ப்பிணி மனைவி... குழந்தை ஆணா, பெண்ணா?- வயிற்றைக் கிழித்த கொடூரக் கணவன்

க்ரைம் - கொலை முயற்சி
க்ரைம் - கொலை முயற்சி

கர்ப்பமாக இருந்த தனது மனைவியின் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று பார்ப்பதற்காக வயிற்றைக் கிழித்துப் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள புதான் மாவட்டத்தில் வசிக்கும் தினகூலித் தொழிலாளி பன்னாலால் (43), அனிதா தேவி (40) தம்பதியருக்கு இதுவரை ஐந்து பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தநிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருக்கிறார் அனிதா தேவி. இந்த முறை தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று பன்னாலால் ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக தன் மனைவியை ஒரு பூசாரியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த முறையும் பெண் குழந்தைதான் பிறக்கும் என்று பூசாரி குறி சொன்னதாகக் கூறப்படுகிறது.

கொலை முயற்சி
கொலை முயற்சி

இதனால் பன்னாலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு குடிபோதையில் வீடு திரும்பிய பன்னாலால், கருவைக் கலைக்கச் சொல்லி தன் மனைவியைச் சரமாரியாக அடித்திருக்கிறார். அடிபட்டதில் மயங்கிக்கிடந்த மனைவியின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று பார்ப்பதற்காக வயிற்றைக் கிழித்துப் பார்க்க முயன்றிருக்கிறார். வயிற்றைக் கிழித்ததில் அனிதா தேவி ரத்த வெள்ளத்தில் மிதந்திருக்கிறார்.

இதைப் பார்த்த உறவினர்கள், அனிதா தேவியை மீட்டு பரேலியிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கர்ப்பப்பையிலிருந்த குழந்தைக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும், அதிக ரத்தப்போக்கு காரணமாக அனிதா தேவியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து, அவரின் சகோதரர் ரவிக்குமார் சிங் அனிதா தேவியை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றிருக்கிறார். அந்த மருத்துவமனையில், பணம் கட்டினால் மட்டுமே சிகிச்சையளிக்க முடியும் என்று சொல்ல, டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.

கைது
கைது
Representational Image

இதையடுத்து, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு பன்னாலால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். கணவன், கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு