ஹைதராபாத்தில், 10 வயது சிறுவன் ஒருவன் மளிகை கடையில் குளிர்பானம் திருடியதாக உடலில் மிளகாய்ப்பொடி தூவி அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் தாயார் நேற்று, `தன் மகனை கடையின் உரிமையாளர் வீட்டின் மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி உடலில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை' செய்ததாக போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

மேலும் சிறுவனின் மாமா, ``சிறுவன் கடையில் திருடுவதைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவோ அல்லது சிசிடிவி காட்சிகளைக் காட்டவோ ஏன் முடியவில்லை... அவர் எப்படி வீட்டுக்கு அழைத்துச் சென்று இப்படி அடிக்க முடியும்" என்று கேட்டார். பின்னர் சிறுவனின் தாயாரின் புகாரின் அடிப்படையில் கடை உரிமையாளரை போலீஸார் கைதுசெய்தனர்.

பின்னர் இது குறித்து ஊடகத்திடம் பேசிய போலீஸ் அதிகாரி சைதா பாபு, ``கடைக்காரர் சிறுவனை பயமுறுத்தி திருடுவதைத் தடுக்க விரும்பியிருக்கிறார். மேலும் அவர், தன்னுடைய கடையிலிருந்து அந்த சிறுவன் அடிக்கடி சிலவற்றை எடுத்ததாகக் கூறினார். தற்போது அவர், தாமாக முன்வந்து காயப்படுத்துதல், குற்றவியல் மிரட்டல் போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவருகிறார்" என்று தெரிவித்தார்.