Published:Updated:

`உதவி கேட்கவில்லை; அவர்களாகவே வண்டியை எடுத்துச் சென்றார்கள்!' - தங்கையிடம் பேசிய பிரியங்காவின் ஆடியோ

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் தன் தங்கையிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் மருத்துவர்
ஹைதராபாத் மருத்துவர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அருகில் உள்ள ஷம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர், கடந்த 27-ம் தேதி இரவு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் பெண்  மருத்துவர்
ஹைதராபாத் பெண் மருத்துவர்

பெண் மருத்துவரைக் கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், இறந்த பெண் மருத்துவர் தன் தங்கையிடம் இறுதியாகப் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், `இன்று நீ அலுவலகம் சென்றுவிட்டாயா? என்ற கேள்வியுடன் தங்கையிடம் பேசத் தொடங்கியுள்ளார் மருத்துவர். அதற்கு `ஆம்’ என தங்கை பதிலளிக்க, தொடர்ந்த மருத்துவர், `என்னிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிரு, என்ன பிரச்னை என்பதைப் பிறகு கூறுகிறேன். எனக்குப் பயமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவரின் தங்கை, `ஏதாவது விபத்தில் சிக்கியிருக்கிறாயா?’ எனக் கேட்டுள்ளார்.

மருத்துவர் : நான் முன்னர் கூறியதுபோல என் வண்டியை சுங்கச்சாவடி அருகில் நிறுத்த, அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. அதனால் சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ள சாலையில் நிறுத்தினேன். திரும்பி வந்து பார்த்தபோது வண்டி பஞ்சராகியுள்ளது.

தங்கை : வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு, வேறு வாகனத்தில் வீட்டுக்கு வந்துவிடு.

மருத்துவர் : வண்டியை இங்கே நிறுத்தினால் காலையில் எப்படி எடுப்பது.. யார் வந்து எடுப்பார்கள்?

தங்கை : மெக்கானிக்கிடம் சொல்லி எடுத்து வருமாறு கூறலாம். எந்த டயர் பஞ்சராகியுள்ளது.

மருத்துவர் : பின்னால் இருக்கும் டயர்.

தங்கை : என்ன நடந்தது தெளிவாகக் கூறு

மருத்துவர் : கூறுகிறேன் கேளு, இங்கே ஒரு லாரி உள்ளது, அதில் சிலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் வந்து என் வண்டியைச் சரி செய்து தருவதாக எடுத்துச் சென்றார்.

தங்கை : திருப்பி வண்டியைத் தரவில்லையா?

எரிந்த நிலையில் பெண் மருத்துவர்
எரிந்த நிலையில் பெண் மருத்துவர்

மருத்துவர் : எடுத்துவந்தான், ஆனால் அனைத்துக் கடைகளும் பூட்டியிருப்பதாகக் கூறிவிட்டு மீண்டும் எடுத்துச் சென்றுவிட்டான். எனக்குப் பயமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

அதற்கு அவரின் தங்கை, `அருகில் டோல் உள்ளதா, அங்கு சென்று நின்றுகொள், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவன் வண்டியைக் கொடுத்ததும் வீட்டுக்கு வந்துவிடு’ எனத் தெரிவிக்கிறார். ‘ டோலில் நிறைய பேர் இருப்பார்கள். அனைவரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். எனக்குப் பயமாக இருக்கும். கொஞ்சநேரம் நீ என்னுடன் பேசிக்கொண்டிரு அதற்குள் அவன் வந்துவிடுவான்’ என்று மருத்துவர் பேசியுள்ளார்.

`தார்பாயில் சுற்றப்பட்ட உடல்; எரிந்த பிறகும் நோட்டம்’ - ஹைதராபாத் பெண் கொலையில் என்ன நடந்தது?

தொடர்ந்து, ``இங்கு இருப்பார்கள் பேய் போல என்னையே உத்துப் பார்த்துக்கொண்டுள்ளனர். எனக்குப் பயமாக உள்ளது. முதலில் நான் அவர்களிடம் உதவி கேட்கவேயில்லை. அவர்களாக வந்து என் வண்டி பஞ்சராகியிருப்பதாகக் கூறினார்கள். நான் பார்த்துக்கொள்கிறேன், அருகில் இருக்கும் பேருந்து நிலையத்துக்குப் போய் சரிசெய்துகொள்கிறேன் என்று கூறினேன். ஆனால் அவர்கள், `மேடம், வண்டி பாதியிலேயே நின்றுவிட்டால் பெரும் சிரமமாகிவிடும். எங்களிடம் தாருங்கள் நாங்கள் சரிசெய்து தருகிறோம்’ எனக் கூறினர். நான் தயங்கியபோது அவர்கள் விடாமல் என்னைப் பின்தொடர்ந்து வந்தனர். என்னால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை. வண்டியுடன் சென்றவன் இன்னும் வரவில்லை. எனக்கு மிகவும் பயமாக உள்ளது” எனக் கூறியவாறே அழத்தொடங்கிவிட்டார் மருத்துவர்.

`அவள் பேசிய கடைசி வார்த்தை; அதிர்ச்சி கொடுத்த போலீஸ்!' 
-கலங்கும் ஹைதராபாத் பெண் மருத்துவரின் தாய்

அதற்கு அவரின் தங்கை, ``அருகில் இருக்கும் டோல்கேட்டுக்கு செல். இந்த நேரத்தில் நீ எதற்காகச் சென்றாய். விரைந்து வீட்டுக்கு வரவேண்டாமா? எனக் கேள்வி கேட்க, ``நாளை எங்கள் மருத்துவமனையில் ஆய்வு நடக்கவுள்ளது, ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த வேலை தொடர்பாகவே தற்போது நான் செல்ல நேர்ந்தது” எனப் பதில் அளித்தவாறே மீண்டும் அழுகிறார் மருத்துவர்.

``பயப்படாதே எதுவும் நடக்காது. தைரியமாக இரு இல்லையென்றால் டோல்கேட் சென்றுவிடு. இரு.. ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து நான் போன் செய்கிறேன்” எனக் கூறிவிட்டு மருத்துவரின் தங்கை போனைக் கட் செய்துள்ளார்.

அடுத்த 5 நிமிடங்கள் கழித்து போன் செய்தபோது பெண் மருத்துவரின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ள மருத்துவரின் தங்கை, ``என் அக்கா எனக்குப் போன் செய்யும்போது, இரவு லேட் ஆகிவிட்டதால்தான் பயந்துள்ளார் என்று நினைத்தேன். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டபோதுதான் அவளின் கஷ்டம் எனக்குப் புரிந்தது.

Representational Image
Representational Image

நெட்வொர்க் பிரச்னையால் போன் எடுக்கவில்லை என நினைத்தேன். ஆனால், இப்படி நடக்கும் என்று நான் ஒருபோதும் யோசிக்கவில்லை. அங்கிருப்பவர்களை அவள் நம்பினாள், ஆனால் அதையே அவர்கள் பலமாக எடுத்துக்கொண்டு இப்படிச் செய்துவிட்டனர். என் அக்கா அனுபவித்த அதே வேதனையைக் குற்றவாளிகள் அனுபவிக்க வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் அவள் 100-க்கு போன் செய்ய மறந்துவிட்டாள், எனக்கும் அது தோன்றவில்லை. போலீஸாருக்கு போன் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை இனிமேலாவது பெண்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்” எனக் கலங்கியவாறு பேசியுள்ளார்.