Published:Updated:

`இரவு 12 மணிக்கு வந்து 3 மணிக்கு சென்றுவிட்டான்!’ - ஹைதராபாத் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் தாய்

இதற்கு முன் இப்படி நடந்ததில்லை என ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பெற்றோர் தங்கள் மகன்கள் பற்றித் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத் பெண் மருத்துவர்
ஹைதராபாத் பெண் மருத்துவர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த இரு நாள்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோஷங்கள் தேசம் முழுவதும் வலுத்து வருகின்றன. பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் பலர் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

போராட்டம்
போராட்டம்
Twitter

இந்த விவகாரத்தில் முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தெலங்கானா போலீஸார் மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், ``கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும் பெண் மருத்துவரிடம் பேசுவதற்கு முன்னதாக, அவர்கள் நின்றிருந்த டோல்கேட்டுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைக்கு சென்று இரண்டு மது பாட்டில்கள், குளிர்பானங்கள் மற்றும் சில தின்பண்டங்களை வாங்கி வந்துள்ளனர்.

`நாடகம்.. பாலியல் வன்கொடுமை.. டார்ச்சர்'- ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பின்னர் மருத்துவரின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று அவருக்கு வலுக் கட்டாயமாக மது கலந்த குளிர்பானதைக் கொடுத்துக் குடிக்கவைத்துள்ளனர். மருத்துவர் இறந்த பிறகுதான் பெட்ரோல் வாங்கிவந்து அவரது உடலை எரித்துள்ளனர். கொலை செய்துவிட்டு நான்கு பேரும் லாரியில் ஏறி தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பாஷா என்ற ஆரிஃப் மற்ற குற்றவாளிகளை அரம்கர் எக்ஸ் சாலை அருகே விட்டுவிட்டு நாராயணன் பேட்டையில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ஆரிஃப் , கேசவலு
ஆரிஃப் , கேசவலு

சம்பவம் நடந்த இரவு டோல்கேட் அருகே ஒரு திறந்த வெளியில் நீண்ட நேரமாக லாரி நின்றுகொண்டிருந்ததை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்துள்ளனர். மருத்துவரின் இரு சக்கர வாகனம் சாலையில் செல்பவர்கள் யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே லாரியை குறுக்கில் நிறுத்திவைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது” எனக் கூறியுள்ளனர்.

`தார்பாயில் சுற்றப்பட்ட உடல்; எரிந்த பிறகும் நோட்டம்’ - ஹைதராபாத் பெண் கொலையில் என்ன நடந்தது?

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் லாரி கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரைத் தேடிச் சென்றுள்ளனர் காவல்துறையினர். அவரிடம் விசாரித்தபோதுதான் ஆரிஃப் ஓட்டுநராக வேலை செய்வது தெரியவந்துள்ளது. இதையடுத்தே அவரும் மற்ற மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவா, நவீன்
சிவா, நவீன்

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ஆரிஃப்பின் பெற்றோர் தங்கள் மகனைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ளனர். ``என் மகன் கடைசியாக, கடந்த புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்தான். வந்து, `எனது வாகனம் விபத்தைச் சந்தித்துவிட்டது. அதனால் தாமதமாகிவிட்டது' எனக் கூறினான். நாங்கள் வேறு எதுவும் கேட்கவில்லை. பின்னர் ஒரு மணி நேரம் படுத்திருந்துவிட்டு மீண்டும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து வெளியில் சென்றுவிட்டான். இதுவரை அவன் இதுபோன்ற எந்தக் குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டதில்லை. பின்னர் மறுநாள் வந்து காவலர்கள் அவனை அழைத்துச் சென்றுவிட்டனர். உண்மையில் அன்று இரவு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது” எனப் பேசியுள்ளனர்.

`யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை’ - ஹைதராபாத் மருத்துவர் விவகாரத்தில் 3 காவலர்கள் சஸ்பெண்டு!

தொடர்ந்து பேசிய கேசவலு என்பவரின் தாய், ``எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு என் கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார் அதன் பிறகு மகன் வேலைக்குச் செல்லத் தொடங்கினான். அப்போதுதான் அவனுக்கு மதுப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவன் ஒரு கிட்னி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு கிட்னி பிரச்னையால் சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றான். அவன், கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் அவனுக்கு எந்த வேலையும் நாங்கள் சொல்வதில்லை.

பெண் மருத்துவர் கொலை
பெண் மருத்துவர் கொலை

கேசவலு எங்கு செல்வான், எப்போது வருவான் என எதையுமே என்னிடம் கூறமாட்டான். அவனது விருப்பம்போல் இருப்பான். அந்த நிலையில்தான் ஒரு லாரி டிரைவரிடம் கிளீனராக வேலைக்குச் சேர்ந்துள்ளதாகக் கூறினான். அவன் உண்மையில் தவறு செய்தானா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. அனைத்துப் பெண்களும் பொக்கிஷம் போன்றவர்கள்தான். எனக்கும் ஒரு மகள் உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்கு இருக்கும் அதே வேதனை எனக்கும் உள்ளது. அனைவருக்குமே அந்த வேதனை உள்ளது” என்று பேசியுள்ளார்.