Published:Updated:

கிட்னி பாதிப்பு; டயாலிசிஸ் சிகிச்சை..!- ஹைதராபாத் வழக்கில் கைதானவர்களை சந்திக்க மறுத்த பெற்றோர்

நால்வரில் ஒருவரான கிளீனர் கேசவலு எனப்படும் சென்னகேசவலு, சிறை அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

கேசவலு, சிவா, நவீன், முகமது பாஷா என்ற ஆரீப்
கேசவலு, சிவா, நவீன், முகமது பாஷா என்ற ஆரீப் ( twitter )

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர், கடந்த வாரம் லாரி ஓட்டுநர் மற்றும் க்ளீனர்கள் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலைசெய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக, இந்தியாவின் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

மற்ற பாலியல் வழக்குகளைப்போல் இதையும் தாமதப்படுத்தாமல், விரைவில் நீதி கிடைக்க வழிவகுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரம், நேற்று மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டு, எம்.பி-க்கள் கடுமையாக விவாதம் செய்தனர்.

கால்நடை பெண் மருத்துவர்
கால்நடை பெண் மருத்துவர்

இதற்கிடையே, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், ``மாநில அரசிடம் இந்த விவகாரத்தில் அறிக்கை கேட்டுள்ளேன். விரைவில் மத்திய உள்துறையிடம் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நாராயண்பேட்டை மாவட்ட ஜக்லரைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் முகமது பாஷா என்ற ஆரீப், நவீன், க்ளீனர்கள் கேசவலு, சிவா என்ற நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள செர்லப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த நால்வரில் ஒருவரான க்ளீனர் கேசவலு எனப்படும் சென்னகேசவலு, சிறை அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

`2 வருடமா நோ லைசென்ஸ்; போலீஸ் கோட்டைவிட்ட அந்த நிமிடம்!' -பெண் மருத்துவர் கொலையில் அதிர்ச்சி பின்னணி

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள கேசவலு, தனக்கு சிகிச்சை வேண்டும் எனக் கோரியுள்ளதாக சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, இதற்காக ஹைதராபாத்தின் நிம்ஸ் (நிஜாம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்) மருத்துவமனையில் வழக்கமான டயாலிசிஸ் சிகிச்சைபெற்று வருவதாகவும், அதைச் சிறையில் தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்குபேரையும் இதுவரை அவர்களது குடும்பத்தினர் யாரும் சந்திக்க வரவில்லை எனக் கூறியுள்ளன சிறை வட்டாரங்கள்.

டயாலிசிஸ் சிகிச்சை கோரும் கேசவலு
டயாலிசிஸ் சிகிச்சை கோரும் கேசவலு

இதுதொடர்பாக, 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'விடம் பேசியுள்ள சிறை அதிகாரி ஒருவர், ``குற்றவாளிகளைச் சந்திக்க எந்தக் குடும்பமும் இதுவரை வரவில்லை. சிறை விதிகளின்படி, கைதிகள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கலாம். அதன்படி சந்திக்க அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் வருவார்கள் என்று நான்கு பேரும் நம்பினர். ஆனால் யாரும் வரவில்லை" என்று கூறியுள்ளனர். கேசவலுவுக்கு அதிகமான மதுப்பழக்கம் இருந்துள்ளது. அதனால், அவரது ஒரு கிட்னி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பே கிட்னி பிரச்னையால் சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற்ற பிறகே ஓரளவு குணம் அடைந்துள்ளான். அப்போது, கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில்தான், தற்போது சிகிச்சை கோரி முறையிட்டுள்ளான்.

`தார்பாயில் சுற்றப்பட்ட உடல்; எரிந்த பிறகும் நோட்டம்’ - ஹைதராபாத் பெண் கொலையில் என்ன நடந்தது?

இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த கேசவலுவின் தாய், ``எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். என் மகன் தவறு செய்திருந்தால் பெண் மருத்துவர் எப்படி எரிக்கப்பட்டு கொல்லப்பட்டாரா, அதேபோல என் மகனையும் எரித்துவிடுங்கள். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரும் ஒரு தாயின் மகள் இல்லையா? நான் இன்று கஷ்டப்படுகிறேன். அந்தப் பெண்ணின் தாய் என்ன செய்கிறாள் என்பதை என்னால் கற்பனை செய்துபார்க்க முடிகிறது" என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

கேசவலு தாய்
கேசவலு தாய்

குற்றவாளிகள் நால்வருக்கும் ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டோம் என்று ரங்காரெட்டி மாவட்டத்தின் வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். இதனால், நால்வரும் இப்போது மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் உதவியைச் சார்ந்து உள்ளனர். இதுதொடர்பாகப் பேசியுள்ள மூத்த அதிகாரி, "கைதிகளுக்கு அவர்களின் உரிமைகள் கூறப்படுவது போலவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சட்ட உதவி கோரலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களது கோரிக்கை, சிறையில் அவர்களைச் சந்திக்கும் டி.எல்.எஸ்.ஏ வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

`இரவு 12 மணிக்கு வந்து 3 மணிக்கு சென்றுவிட்டான்!’ - ஹைதராபாத் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் தாய்