Published:Updated:

`கார் வாங்க காசு வேணும்; கொலை செஞ்சேன்!’ - டாஸ்மாக் ஊழியர் வழக்கில் குற்றவாளியின் வாக்குமூலம்

கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் டாஸ்மாக் ஊழியரைக் கொலை செய்து, 1.82 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்தேன் எனக் குற்றவாளி அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்தன்
அரவிந்தன் ( செ.பிரபாகரன் )

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்துள்ள பேட்டப்பனூர் டாஸ்மாக் கடையில், திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள மீனாட்சி மண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 14 -ம் தேதி இரவு விற்பனையை முடித்துவிட்டு, கடையை மூடும் சமயத்தில், கடைக்குள் புகுந்து விற்பனையாளர் ராஜாவைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, அன்றைய தினம் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.1.82 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த நாள் காலையில், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஜெகநாதன், வந்து பார்த்தபோது, ராஜா பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து குருபரப்பள்ளி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி எஸ்.பி பண்டி கங்காதர், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கொலை செய்யப்பட்ட டாஸ்மார்க் ஊழியர் ராஜா
கொலை செய்யப்பட்ட டாஸ்மார்க் ஊழியர் ராஜா
செ.பிரபாகரன்

குருபரப்பள்ளி ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமையிலான தனிப்படை டீம், கொலை சம்பவம் நடந்தது ஆகஸ்ட் 14, அடுத்த நாள் சுதந்தர தினம் என்பதால், வழக்கத்தைவிட அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது. இதை நன்கு அறிந்த நபர்தான் செய்திருக்க முடியும் என விசாரணையை மேற்கொண்டபோது, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மூலமாக செகண்ட் சேல்ஸ் செய்யும் நபர்களின் பட்டியலை எடுத்து விசாரிக்க ஆரம்பித்தனர். கடைசியாகக் காவலர்களின் சந்தேகப் பார்வையில் சிக்கியவர் நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம். அவரை அழைத்துவந்து விசாரணை செய்தபோது, போலீஸ் விசாரணையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கதறிவிட்டார்.

இரண்டு நாள்களாகச் சண்முகத்திடம் விசாரணை நடத்திய போலீஸாருக்கும் எந்தத் துப்பும் கிடைக்காமல் குழம்பிப் போய்விடவே, சண்முகத்தை விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விடும் மகன் அரவிந்தன் பக்கம் பார்வை திரும்பியது. அரவிந்தனின் கை, கால் மற்றும் கை கட்டை விரலில் எப்படி அடிபட்டது எனக் காவலர்கள் பொதுவாக விசாரிக்கவே, வேலை பாக்குற இடத்துல அடிபட்டுருச்சி சார், என அலட்டிக் கொள்ளாமல் பதில் கொடுத்துள்ளார். அதே சமயத்தில் சண்முகத்திடம் சரக்கு வாங்க யாரெல்லாம் கடைக்கு வருவீங்க என போலீஸ் கேட்கவும், பெரும்பாலும் நான்தான் வருவேன். சில சமயம் என் மகன் அரவிந்தன் வருவான் எனத் தெரிவித்துள்ளார்.

அதற்குள் அரவிந்தன் வேலை பார்க்கும் கடையில், அரவிந்தனுக்குக் கடையில் வேலை பார்க்கும்போது அடிபட்டது உண்மையா என போலீஸ் விசாரித்ததில், அரவிந்தன் சொன்னது பொய் என்பதைத் தெரிந்துகொண்டதும், விசாரணை சண்முகத்திற்குப் பதில் அரவிந்தன் பக்கம் திரும்பியது. சார்.. என்னை விட்டுடுங்க நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன் எனக் கதறியுள்ளான்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்
செ.பிரபாகரன்

`ஆகஸ்ட் 14 -ம் தேதி இரவு 9.50 மணி இருக்கும், டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் ராஜா, விற்பனை முடிந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அந்த சமயம் நான் மறைவான இடத்தில் என்னோட இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மறைந்திருந்தேன். அப்போது கட்டட உரிமையாளர் இன்னும் கடையை மூடலையா என்று ராஜாவிடம் கேட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பினார். சுற்றும் முற்றும் பார்த்தேன், யாரும் இல்லை. நேராகக் கடைக்குச் சென்றேன். அண்ணே ரெண்டு பாக்ஸ் குவாட்டர் பாட்டில், ஒரு பாக்ஸ் பீர் பாட்டில் வேண்டும் என்று பணத்தைக் கொடுத்தேன். குவாட்டர் பாட்டில் எடுத்துக் கொடுத்துவிட்டார். பீர் பாட்டில் மட்டும் மேல இருக்கு என்றவரிடம், அண்ணே நானே எடுக்குறேன் என்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து பீர் பாட்டில் பாக்ஸ் எடுக்குறதா நடித்து, கொண்டுவந்திருந்த கத்தியை எடுத்து ராஜாவை சரமாரியாக குத்திக் கொலை செய்தேன்.

`25 வெட்டுகள்; துரத்திய 4 பேர்'- திருத்தணி ஹோட்டலுக்குள் கைப்பந்து வீரரைக் கொலை செய்தது ஏன்?

அன்னைக்கு வசூல் பணம் ரூ 1.82 லட்சம் பணத்தை ஒரு பாக்ஸ்ல போட்டு எடுத்துக்கொண்டு, நேராக எங்க ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் இடத்துக்குப் போய் பணத்தைப் புதைச்சி வைச்சிட்டு, ரத்தக் கரை படிந்த துணியை ஒரு பாறைக்கு மறைவில் வைச்சிட்டு, வீட்டுக்குபோய் வேற துணி மாத்தினேன்'' என்று தெரிவித்துள்ளார்.

``எதுக்கு உணக்குப் பணம்'' எனக் காவலர் கேட்டபோது, ``கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தைக் கொள்ளையடிச்சேன்'' எனப் பதில் அளித்துள்ளான். அரவிந்தனிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, இருசக்கர வாகனம், ரத்தக் கரை படிந்த துணி, 1.82 லட்சம் பணம் ஆகியவற்றை மீட்டுள்ள போலீஸ் அரவிந்தனை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளது.