முடிவடைந்தது நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனை! - சசிகலாவைத் தொடர்ந்து விடுதலையானார் இளவரசி

இளவரசியின் தண்டனைக் காலம் இன்றுடன் முடிவடைந்தது. சிறைத்துறையின் விடுதலை நடைமுறைகள் அனைத்தும் முடிந்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனைக் காலம் முடிந்து, மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த சசிகலா, கடந்த ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

சசிகலாவைத் தொடர்ந்து, இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, கடந்த ஜனவரி 23-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த அவர், கடந்த 2-ம் தேதி மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
இளவரசி, தனக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையான ரூ.10 கோடியை ஏற்கெனவே செலுத்திவிட்டார். முன்னதாக, இளவரசி தனது தண்டனைக் காலத்தில் பிணையில் வெளியே வந்த காரணத்தால் அவரது விடுதலை தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இளவரசியின் தண்டனைக் காலம் இன்றுடன் முடிவடைந்தது. சிறைத்துறையின் விடுதலை நடைமுறைகள் அனைத்தும் முடிந்து விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருக்கும்போது சசிகலாவுக்கு வந்த கடிதங்கள் அனைத்தையும் சிறைத்துறையினர் இளவரசியிடம் ஒப்படைத்தனர். சிறையிலிருந்து இளவரசியை, அவரின் மகன் விவேக், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் சசிகலா தங்கியுள்ள சொகுசு பங்களாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும், வரும் 8-ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னை வரத் திட்டமிட்டுள்ளனர். சசிகலா, இளவரசி இருவரும் விடுதலையான நிலையில், தற்போது சுதாகரன் மட்டும் சிறையில் இருக்கிறார். சுதாகரனின் தண்டனைக் காலம் கடந்த மாதமே முடிவடைந்தபோதிலும், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தாததால் அவரின் விடுதலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.